சென்னை: கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவத்தையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், காலி பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவை, நாகர்கோவில் ஆசாரிபள்ளம், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வேடசந்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளை புறக்கணித்து காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை நடைபெறவில்லை. புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் அவதிப்பட்டனர். மதியம் 12 மணிக்கு பிறகு அனைவரும் வேலைக்கு திரும்பினர்.