இன்றைக்கு எல்லோருமே எழுத்தாளர்கள்தான். அதற்கான வாய்ப்பு சமூக வலைத்தளங்கள்(Social Media) மூலம் கிடைத்திருக்கிறது. முகநூல் எழுத்தாளர்கள். வாட்ஸ்அப் எழுத்தாளர்கள். பத்திரிகை எழுத்தாளர்கள். சினிமா எழுத்தாளர்கள் என்று பல வகை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
வெறும் பொழுதுபோக்குக்காக எழுதுபவர்கள், வருமானத்திற்காக எழுதுபவர்கள் என்று நோக்கங்களும் மாறும்.
ஒரு நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் .
“எழுத்தாளர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?”
இதே கேள்வியை ஒருமுறை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் எழுத்தாளர் கல்கியிடம் கேட்டாராம்.
கல்கி “அதற்கு நான்கு மைகள் வேண்டும் என்று சொன்னவுடன், கலைவாணர்,“சீக்கிரம் சொல்லுங்கள் என்னென்ன மைகள் வேண்டும்?” என்று கேட்க, கல்கி சொன்னாராம்.
ஒன்று திறமை. இரண்டு பொறுமை. மூன்று தனிமை. நான்காவது பேனா “மை” இப்படிச் சொன்னவுடன் கலைவாணர் “நீங்கள் சொல்வது அருமை” என்று சொல்லி விட்டுப் போய்விட்டாராம். என்னிடம் கேள்வி கேட்டவருக்கு இந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டுச் சொன்னேன்.
“எழுத வேண்டும். எழுதிக்கொண்டே இருந்தால் எழுத்தாளராக ஆகலாம்.”
“நான் அதைக் கேட்கவில்லை. எப்படிப்பட்ட கிரகநிலைகள் இருந்தால் ஜோதிடரீதியாக எழுத்தாளராக ஆகமுடியும்?”
எழுத்தாளர் ஆவதற்கான முயற்சியும் எண்ணமும் ஒருவருக்கு இருந்தால், அந்த எண்ணம் தற்காலிகமானதா, அந்த எண்ணம் ஏன் வந்தது? எண்ணம் செயல் வடிவம் பெறுமா? அப்படியே அவர் அந்தத் துறையில் வந்தாலும் வருமானம், நல்ல விதத்தில் வருமா? அல்லது வெறும் புகழ் மட்டும் கிடைக்குமா? அல்லது புகழும் கிடைக்காதா? இதனால் மற்ற வேலைகள் பாதிக்குமா? இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது.
மூன்றாம் பாகம் தகவல் தொழில் நுட்பம், எழுத்து என பல விஷயங்களைச் சுட்டிக் காட்டும். மூன்றாம் பாவகம் சிறப்பாக இருந்தால் எழுத்துத்துறை எண்ணம் வந்துவிடும்.
கிரககாரக ரீதியில் புதன் வலுவாக அமைந்துவிட்டால் எழுத்துத் துறைக்கு வரமுடியும்.
ஆனால், எந்த எழுத்துத் துறை என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் எழுத்தராக இருக்கலாம். அவர் எழுதிக் கொண்டுதான் இருப்பார். ஆனால், சொந்தமாக எழுத மாட்டார். மற்றவர்கள் சொல்வதை எழுதுவார்.
அதைப்போலவே பத்திரப்பதிவு எழுத்தர் என்று இருக்கிறது. மூன்றாம் இடம் டாக்குமென்ட் எனப்படும் பத்திரப்பதிவுத் துறையையும் சுட்டுகிறது. இதுவும் எழுத்துதான்.
பெரும்பாலான ஜோதிட நூல்களில் மூன்றாம் இடமும் புதனும் வலுத்து இருந்தால் அவர்கள் எழுத்தாளராக ஆக முடியும் என்று இருக்கிறது.
ஆனால், எழுத்தாளராகப் புகழடைய பல விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு மற்ற கிரகங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் பாருங்கள். ஒருவர் எழுத்தாளர். நிறைய எழுது கின்றார். ஆனால், பிரசுரம் செய்பவர்கள் எல்லாம் சிற்றிதழ் ஆசிரியர்கள்.
இவர் சொந்தச் செலவில் எழுதி அனுப்ப வேண்டும். அவர்கள் பிரசுரம் செய்து இவருக்கு ஒரு இதழோ இரண்டு புத்தகமோ அனுப்புவார்கள். அதோடு திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான். இன்னொரு எழுத்தாளர் எழுதுவார். அவருக்கு அதிகபட்சம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கிடைக்கும்.
இன்னும் சிலருக்கு 1000 முதல் 2000 வரை சன்மானம் கிடைக்கும்.
இன்னொருவர் சினிமாவுக்கு கதை எழுதுவார். அந்தக் கதைக்கு 50,000 முதல் லட்சம் ரூபாய் வரை தருவார்கள்.
இன்னொருவர் ஆங்கிலத்தில் அற்புதமான ஒரு விஷயத்தை எழுதுவார்.. அவருக்கு லட்சக்கணக்கில் பணம் வரும்.
ஆங்கிலத்தில் ஜெ.கே ரவ்லிங் என்று ஒரு பெண் எழுத்தாளர் இருக்கிறார். ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர் வருமானம். புதிதாக எழுதவில்லை. எழுதிய எழுத்துக்கு பல்வேறு வகையில் வருகிறது. எழுத்தும் வருமானமும் இணைகிறதா என்று பார்க்க வேண்டும்.
புதன் வலுத்திருக்கும். மூன்றாம் இடமும் வலுத்திருக்கும். இன்னும் சொல்லப் போனால்… அவை வருமானம் எனப்படும். இரண்டாம் இடத்தோடும், லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கும். ஆனால், வருமானத்தின் அளவை எப்படி தீர்மானிக்க முடியும்? அதற்கு இயல்பிலேயே சில யோக நிலைகள் இருக்க வேண்டும். வெறும் கிரகத் தொடர்புகள் வைத்துக்கொண்டு அளவைச் சொல்லி விட முடியாது. இது வருமானத்திற்கு மட்டுமல்ல. புகழுக்கும் பொருந்தும்.
வெறும் புதன் மட்டும் வலுப்பெற்றால் அவர்கள் பிரதி எடுக்கும் எழுத்தாளர்களாகவும் சொன்னதை எழுதும் எழுத்தாளர்களாகவும், பத்திரம் எழுதும் எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள்.
நாவல், சிறுகதை போன்ற விஷயங்களுக்கு கற்பனைத் திறம் வேண்டும். அந்தக் கற்பனை திறனைக் கொடுப்பது சந்திரன்.
அடுத்து எழுத்தில் அழகியல் இருக்க வேண்டும். அழகியலைக் கொடுப்பது சுக்கிரன். எழுத்தில் லாஜிக். அறிவுப்பூர்வமான வாதங்கள். இருக்க வேண்டும். அதை கொடுப்பது குரு. காரணம் ஒழுக்கக்கேடான விஷயங்களை எழுதிக்கூட சிலர் சம்பாதிக்கலாம்.
இத்தனை விஷயங்களையும் நினைத்துப் பார்த்தால் எழுத்துத்துறை மட்டுமல்ல, எல்லாத் துறையிலும் நமக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறது? எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும்? என்பதெல்லாம் புரியும்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உள்ளூர் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் கூட நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
ஒரு உதாரண ஜாதகம்.
இவர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். சிம்ம லக்கனம். ஐந்துக்குரிய குரு சந்திரனோடு இணைந்து 11-ஆம் இடத்தில் அமர்ந்து ஐந்தாம் இடத்தைப் பார்க்கின்றார். எப்படிப்பட்ட யோக அமைப்பு பாருங்கள். கஜகேசரி யோகம் என்பார்கள்.
மூன்றாம் அதிபதி சுக்கிரன் நான்காம் இடத்தில் அமர்ந்து பத்தாம் இடத்தைப் பார்வையிடுகின்றனர். பத்தாம் இடம் அவருடைய சொந்த வீடு (ரிஷபம்)இப்பொழுது மூன்று, நான்கு, பத்து எனப்படும் தொழில் ஸ்தானம் பலப்பட்டு விட்டது. சிம்ம லக்கினத்தில் செவ்வாய் இருக்கின்றார். 4ல் சுக்கிரன் திக்பலம் பெற்றிருப்பதோடு சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் லக்ன கேந்திரத்தில் இருக்கின்றார். சிம்ம லக்கினத்திற்கு பாக்யாதிபதி. லக்னாதிபதி செவ்வாய் வீடு தந்த சூரியன் இரண்டில் அமர்ந் திருக்கின்றார். அதனால் தன ஸ்தானமும் வலிமை பெறுகிறது.
சந்திரன் சூரியன் இருவரும் புதன் வீட்டில் அமர்ந்து இருக்கின்றார்கள். குருவுக்கு கேந்திரத்தில் சூரியன்.சந்திர கேந்திரத்தில் சூரியன்.
ஜீவன காரகனான சனி மூன்றாம் அதிபதியான சுக்கிரனை பத்தாம் பார்வையாகப் பார்க்கிறார். இத்தனை அமைப்புகள் இந்த ஜாதகத்தில் பின்னிக்கிடக்கின்றன.
மூன்றாம் இடம் எழுத்து துறை. இரண்டாம் இடம் பணவரவு பதினோராம் இடம் லாபம். இத்தனையும் வலிமையாக இருப்பதால், இவருடைய எழுத்து ஆங்கிலத்தில் உலகப்புகழ் பெற்றது.
பாக்கியாதிபதி செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து, ஆயுள்காரகன் சனி லக்னத்தைப் பார்த்ததால், நீண்ட ஆயுள் இருந்தது.