Wednesday, June 25, 2025
Home ஆன்மிகம்அபூர்வ தகவல்கள் தொழில் எப்படி அமையும் தெரியுமா?

தொழில் எப்படி அமையும் தெரியுமா?

by Nithya

ஒரு ஜாதகத்தின் ஜீவன விஷயத்தை நிர்ணயம் செய்வதற்கு கிரகங்களும் பாவகங்களும் முக்கியம். “சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்” என்பதுபோல, ஜென்ம ஜாதக அமைப்புதான் ஒருவருக்கு என்ன அமைப்பில் படிப்பு அமையும், தொழில் அமையும், வருமானம் அமையும் என்பதைக் காட்டுகின்றது. அதைப் பயன்படுத்திக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே என்ன நடக்கும் என்பதை தோராயமாகத் தெரிந்து கொண்டால், அதிகம் பதற்றப் படாமல் நாம் வாழ்க்கையில் முன்னேறலாம். அதற்கு மட்டும்தான் ஜாதகம் பார்க்கலாமே தவிர, மற்றபடி அந்தந்த கர்மாக்கள் அந்தந்த அமைப்பில் நடந்து தான் தீரும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஜாதக அமைப்பில் உள்ள யோகங்கள் (நன்மை) அவயோகங்கள் (தீமைகள்) எப்பொழுது நடக்கும் என்பதை சொல்லுகின்ற காலக்கணிதம்தான் தசா புத்திகளும் கோச்சாரங்களும்.

வெறும் ராசியை மட்டும் வைத்துக் கொண்டு கோச்சார பலன்களைத் துல்லியமாக கணித்துவிட முடியாது. வேண்டுமானால், பிரச்னம் முறையில் அப்போதைய பிரச்னைக்கு, அன்றைய கிரக நிலையை வைத்துக் கொண்டு, சில விஷயங்களைச் சொல்லலாம்.

இதில் ஒரே ஒரு கேள்விக்குத்தான் பதில் கிடைக்கும். ஒரு ஜாதகத்தின் தொழில், வருமானம் இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு பாவக காரகத்துவமும் கிரக காரகத்துவமும் இணைய வேண்டும். பணம் இரண்டாம் பாவகம். குரு பணம் தரும் தனகாரகன். அடுத்து இரண்டாம் அதிபதி. 10ம் இடம் தொழில்.

6ம் இடம் அடிமைத் தொழில். (பிறரிடம் வேலை செய்தல்). 10 இடத்து அதிபதி, ஜீவன காரகனாகிய சனியின் நிலை என இத்தனையும் பார்க்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் செய்ய வேண்டும் என்றால், என்னென்ன பாவகங்களும் என்னென்ன காரகங்கள் இணைய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். இசைக் கலைஞர் என்றால், என்னென்ன அமைப்பில் பாவகங்களும் கிரகங்களும் இணைய வேண்டும் என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் ஆசிரியர் தொழில் செய்ய வேண்டும் என்றால், என்னென்ன பாவகங்களும் என்னென்ன காரகங்களும் இணைய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆசிரியரை குரு என்று சொல்கின்றோம். எனவே அவருக்குக் குருவின் அருள் தேவை. ஒருவருக்கு குருவின் அமைப்பு நன்றாக அமைந்துவிட்டால், அவர் பிறருக்கு நல்ல விஷயங்களை உபதேசிக்கும் அமைப்பில் இருப்பார். அதே நேரம் அவர் அதைத் தொழிலாகக் கொள்ள முடியுமா என்று சொன்னால் தொழில் ஸ்தானமாகிய பத்தாம் இடத்தோடு தொடர்பு வேண்டும். வருமானம் வருமா? என்றால் இதே அமைப்பு இரண்டாம் இடத்தோடும், இரண்டாம் அதிபதியோடும் இணைய வேண்டும்.

அடுத்தது படித்தால்தானே ஒருவர் ஆசிரியர் தொழிலுக்கு வரமுடியும். எனவே படிப்புக்கான கிரகமாகிய புதன் வலிமை வேண்டும். 4ம் இடம் வலிமை பெற்று இருக்க வேண்டும்.

சந்திரன் வலிமையோடு இருக்க வேண்டும். அரசு உத்தியோகம் என்று சொன்னால் நிச்சயம் சூரியன் அல்லது செவ்வாயின் உதவி வேண்டும். அல்லது சிம்ம ராசித் தொடர்பு ஜீவனகாரகனுக்கு ஏற்பட வேண்டும். ஆசிரியருக்கு பேச்சு வன்மை முக்கியம். எனவே பேச்சுக்கான இடமாகிய வாக்கு ஸ்தானம் அதாவது இரண்டாம் இடம் வலிமை அடைய வேண்டும். இந்த இரண்டாம் இடம் வருமானத்துக்கான இடம் என்பதால், பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். இதில் இன்னொரு நுட்பத்தையும் கவனிக்க வேண்டும்.

ஒரே விஷயம் பலவற்றைச் சுட்டிக் காட்டும். அதனால்தான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை முடிவெடுக்க குறிப்பிட்ட கிரகம் மட்டுமோ அல்லது குறிப்பிட்ட பாவம் மட்டுமோ துணை புரியாது. இது ஒரு கிரக பாவ கூட்டின் விளைவு. (Combined Effect) ஆசிரியர் தொழிலுக்கு பேச்சுக்கு உரிய இரண்டாம் இடம் வலிமை பெற வேண்டும். அதுவே வருமானத்திற்கு உரிய இடமாகவும் குடும்பம் சம்பந்தப்பட்ட இடமாகவும் இருப்பதையும் பார்க்க வேண்டும்.

பேச்சு ஸ்தானம் என்பது ஆசிரியர் தொழிலுக்கு மட்டுமல்ல, வழக்கறிஞர் தொழிலுக்கும் அவசியம், வியாபாரம் செய்வதற்கும் அவசியம். எனவேதான் பலனை எடுக்கும் பொழுது மற்ற கிரகங்களின் (பாவங்களின்) இணைப்பை வைத்து எடுக்க வேண்டும்.

அது சற்று சிக்கலான விஷயம்தான். இருந்தாலும் சற்று கூர்மையாக கவனிப் பதன் மூலமாகவும், பல்வேறு ஜாதகங்களைப் பார்த்த அனுபவத்தின் அடிப்படையிலும் ஒரு முடிவுக்கு வரமுடியும். அடுத்தது குரு தனகாரகன். ஆசிரியர் தொழிலுக்கும் உரியவர். அதே நேரம் அதுவே நமக்கு ஜீவனாக அமைய வேண்டும் என்று ஜீவன காரகனாகிய சனியின் தயவு வேண்டும். 10ம் இடத்தொடர்பும் வேண்டும். ஜீவனகாரகன் வலுவிழந்து விட்டால் ஆசிரியர் தொழில் அமைந்தாலும் அது சிறக்காது. சில நேரங்களில் பாவகங்களினால் ஒரு தொழில் அமைந்தாலும் கிரகங்கள் சிறப்பாக அமையாவிட்டால் அந்தத் தொழில் திருப்தியாக இருக்காது. ஆக, ஆசிரியராக இருக்க வேண்டும் என்றால் பாக்கியஸ்தானமாகிய இரண்டாம் இடம், தொழில் ஸ்தானமாகிய பத்தாம் இடம் அடிமைத் தொழில் ஸ்தானமாகிய ஆறாம் இடம், சனி, குரு, புதன், செவ்வாய் இவர்களுடைய தயவு வேண்டும்.

நல்ல திறமையான ஆசிரியர்களாக இருப்பார்கள். இரண்டாம் இடம் சற்று பலம் குறைந்து, தொழில் ஸ்தானத்தோடு இணைப்பு பெறாமல் தனித்து நின்றால், பல வருடங்கள், மிகவும் குறைந்த சம்பளத்தில், நிரந்தரம் இல்லாத ஆசிரியர் தொழிலைப் பார்க்கக்கூடிய சூழ்நிலை அமைந்துவிடும். அவர்கள் அரசுத் தேர்வு எழுதினாலும் ஏதோ ஒரு தடை வந்து முன்னேறாமல் செய்துவிடும். அல்லது நடக்கக்கூடிய திசா புத்திகள் இரண்டாம் இடத்திற்கு (வருமானம்) 6-12 க்குரிய திசையாக இருக்கும்.

இவைகள் குறிப்பிட்ட பாவத்திற்கு இடைஞ்சல் தரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாக்கிய அதிபதி திசை அமைந்தும்கூட சிலருக்கு வருமானம் எட்டாக்கனியாக இருந்த நிலையும் உண்டு. மிதுன லக்கினத்திற்கு பாக்யாதிபதி சனி. அஷ்டமாதிபதியும் அவர்தான். மிதுன லக்கினத்திற்கு இரண்டாம் இடமான கடக லக்கினத்திற்கு அஷ்ட மாதிபதியும் அவர்தான்.

இவர் வலிமை குறைந்து திசை நடத்தும் பொழுது, உத்தியோகம் கிடைத்தாலும் சரியான சம்பளம் கிடைக்காது. காரணம், இரண்டாம் இடத்திற்கு சனி எட்டாம் இட திசையாகிவிடுகிறது. இப்படி பல விஷயங்களை நூல் பிடித்து ஆராய்ந்தால்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். சில அசல் ஆசிரியர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் விதிகள் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi