Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறைத்து மதிப்பிடாதிருங்கள்!

ஒரு சிறுமி தனது கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள். அப்போது அவளது தாய், “ஒரு ஆப்பிளை எனக்குக் கொடுக்கிறாயா?” என்று அன்புடன் கேட்டார். சிறுமி பதில் சொல்லவில்லை. முதலில் ஒரு ஆப்பிளை கடித்தாள். பிறகு, மற்றொரு ஆப்பிளையும் கடித்தாள். இதைக் கண்ட தாயின் மனம் ஏமாற்றம் கொண்டது. “இவள் பகிர்ந்து கொடுக்க விரும்பவில்லை போலிருக்கிறதே” என்று நினைத்து வருந்தினாள்.

ஆனால், அடுத்த நொடியே சிறுமி தனது கையில் இருந்த ஒரு ஆப்பிளை நீட்டி, “அம்மா, இதை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டிலும் இது தான் மிகவும் இனிப்பாக இருக்கிறது. எனக்கூறி இனிப்பான பழத்தை தன் தாயிடம் கொடுத்தாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட தாய் நெகிழ்ந்து போனார். தனது மகளின் உயரிய குணத்தை சற்று நேரத்தில் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என வருந்தினாள். வெளியில் தெரியும் செயல்களை மட்டும் வைத்து ஒருவரை மதிப்பிடக் கூடாது என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

இறைமக்களே, நாம் பல நேரங்களில் மனிதர்களை அவர்களின் வெளிப்படையான செயல்களைப் பார்த்து உடனடியாக தீர்ப்பளித்து விடுகிறோம். ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நமக்குத் தெரியாத ஒரு காரணம் இருக்கலாம். சிலர் அமைதியாக இருப்பார்கள்; அதனால் அவர்கள் அக்கறையற்றவர்கள் என்று அர்த்தமல்ல. சிலர் தாமதமாக செயல்படுவார்கள்; அதனால் அவர்கள் பொறுப்பற்றவர்கள் என்றும் சொல்லமுடியாது.

ஒருவரின் மனதையும் நோக்கத்தையும் முழுமையாக அறியாமல் அவர்களைப்பற்றி முடிவு செய்வது தவறான புரிதல்களை உருவாக்கும். பொறுமை, புரிதல் மற்றும் அன்பு ஆகியவை உறவுகளை பாதுகாக்கும் முக்கியமான பண்புகள். மற்றவர்களின் செயல்களைப் பார்க்கும் முன் அவர்களின் உள்ளத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே உண்மையான ஞானம். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு போராட்டத்தையும் ஒரு கதையையும் சுமந்து செல்கிறார்கள். ஆகையால் அவசரமாக விமர்சிப்பதை விட, கொஞ்சம் காத்திருந்து புரிந்துகொள்ள முயற்சிப்போம். புரிதல் இருக்கும் இடத்தில் அன்பு வளரும்; அன்பு இருக்கும் இடத்தில் உறவுகள் நிலைக்கும்.

“ஆகையால் காலத்திற்கு முன்பாகத் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்” (1 கொரிந்தியர் 4:5) என இறைவேதம் எச்சரிக்கிறது. எனவே உண்மையை முழுமையாக அறியாமல் ஒருவரைப் பற்றி தீர்ப்பு கூறாமல், பொறுமையுடனும் அன்புடனும் நடக்க வேண்டும்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.