?ஒரே ராசியைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே விதமான பலன்கள்தான் நடக்குமா?
– விஜயா செல்வம், கேரளா.
ஒரு ராசியை எடுத்துக்கொண்டால் அதிலேயே கோடிக்கணக்கான நபர்கள் இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் எப்படி அதேபலன் நடக்கும். உங்களுக்கு நடக்கக்கூடிய நன்மை தீமைகள் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தின் வலிமையை பொருத்தே நடைபெறும். அதற்கு மேல் நடக்கக்கூடிய தசாபுத்திகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இவை இரண்டையும் வைத்துக்கொண்டு ராசி பலன்களையும் இணைத்தால் பலன்கள் ஓரளவு துல்லியமாகக் கிடைக்கும். உதாரணமாக, ஒருவருக்கு அஷ்டம திசையில் ஏழரைச் நாட்டுச் சனியும் இணைந்தால் அவர் மிகவும் துன்பப்படுவார். அதே அஷ்டமச் சனியில், கோசார சனி நல்ல வீட்டில் இருந்தால் அவருடைய கஷ்டங்கள் முழுவதுமாக போகா விட்டாலும் குறையும். இதுதான் ராசி பலனைப் பார்க்கும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. பொதுவாகவே ஜாதகப் பலனைப் பார்க்கின்றவர்கள் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். பலன்கள் சரியில்லாமல் இருந்தால் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பொருள். பலன்கள் நல்ல விதமாக இருந்தால் உற்சாகத்தோடு வேலை செய்ய வேண்டும் என்று பொருள். வேலை செய்யாமல் இருந்தால் நடக்க வேண்டிய நல்ல பலன்களும் சரியாக நடக்காது. ஐயோ கஷ்டம் என்று தலையில் கையை வைத்துக் கொண்டு இருந்தால், அந்தக் கஷ்டம் இன்னும் அதிக கஷ்டத்தைக் கொடுக்கும்.
?வீட்டிற்கு நீளம் அதிகம் இருக்க வேண்டுமா? அகலம் அதிகம் இருக்க வேண்டுமா?
– அயன்புரம்.சத்திய நாராயணன்.
சாத்திரப்படி நீளம்தான் அதிகம் இருக்க வேண்டும். நீளமானது அகலத்தை போல ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நன்மை. அதனால்தான் மனை கூட 40 அடி அகலத்திலும் அதன் ஒன்றரை மடங்கான 60 அடி நீளத்திலும் போட்டு வைப்பார்கள். அதைத்தான் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) என்று சொல்லுவார்கள்.
?பூஜைக்கு மனது சுத்தம் முக்கியமா? உடல் சுத்தம் முக்கியமா?
– குமார், சென்னை.
இரண்டுமே முக்கியம். ஆனால், இரண்டிலும் மிக முக்கியம் மனத்தூய்மை. உடல் தூய்மை நீரால் அமையும், மனத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்றான் வள்ளுவன். பூஜையில் சிந்தை செயல் சொல் மூன்றும் ஒன்றிழைய வேண்டும். ஒரு நிமிடமாவது இந்த திரிகரண சுத்தியோடு பூஜை செய்தால் அந்த பூஜை பலன் கொடுக்கும். இதைத்தான் ஆண்டாள், தூயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவான் என்று பாடி வைத்தாள்.
?பேசும் வார்த்தைகளில் பலர் கவனம் இல்லாமல் பேசுகிறார்களே? தேவையா?
– சிவசங்கர், சிவகங்கை.
உண்மைதான். பலபேர் கவனம் இல்லாமல் தான் தோன்றிய வார்த்தைகளை எல்லாம் சொல்லி விடுகிறார்கள் அப்படிச் சொல்வதை விட பேசாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளை யாராலும் தொட முடியாது. ஆனால், வார்த்தைகள் மற்றவர்களைத் தொடும். மயக்கும். மயங்க வைக்கும். சமயத்தில் பிரச்னையிலும் சிக்க வைக்கும். எனவேதான் சொல்லாடலில் கவனம் என்றார்கள்.
?உடலும் மனமும் அமைதியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
– ஜெயலக்ஷ்மி, சிவகாசி.
பிடிக்காத விஷயத்தைக் கண்டு கொள்ளாதீர்கள். வேண்டாத விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாதீர்கள். இந்த மூன்றையும் செய்து பாருங்கள். உங்கள் உடலும் மனமும்
ஆரோக்கியமாக இருக்கும்.
?ஜாதகர்மா என்று ஒரு சடங்கைச் சொல்லுகின்றார்களே? அது எப்பொழுது செய்ய வேண்டும்?
– கே.முருகன், பழனி.
ஜாதகர்மா என்றால் குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு. ஒருவன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான சடங்குகள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் பிறந்த குழந்தைக்குச் செய்யும் முதல் சடங்கு இந்த ஜாதகர்மா தான் தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் இந்தச் சடங்கு செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது அதற்கான அமைப்போ அவ காசமோ இல்லை.அதனால் 11-ம் நாள் புண்ணியாகவாசனம் செய்து, நாமகரணம் செய்யும்பொழுது சேர்த்துச் செய்து கொள்கிறார்கள்.
செவ்வாயோ வெறும்வாயோ என்றெல்லாம் சொல்லுகின்றார்கள் செவ்வாய்க்கிழமை பொதுவாக எந்த நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற நாளாக இல்லையே!
ஒவ்வொரு நாளும் அதற்கான காரியங்களுக்கு ஏற்றதாகவே இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை திருமணம் போன்ற சில நிகழ்ச் சிகளைச் செய்ய மாட்டார்கள். செவ்வாய் பூமிகாரகன். விவசாயத்தில் எருவிடுவதற்கு ஏற்றநாள் செவ்வாய்க்கிழமை. அதேபோலவே செவ்வாய் ஹோரையில் அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம். ஆயுதங்கள் தயாரிப்பதற்கு ஏற்ற நாள் செவ்வாய். புதிய எந்திரங்கள் தயாரிப்பதற்கு ஏற்ற நாள். திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தான் கூடாதே தவிர செவ்வாய்க்கும் இப்படி சில சிறப்புகள் உண்டு.
?சந்திர கண்டம் என்றால் என்ன?
– அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
எந்த திசையில் பயணம் செய்யக்கூடாது என்பதை சொல்லும் குறிப்புகளில் ஒன்று சந்திர கண்டம்.ஒரு காலத்தில் பயணம் செய்யும்போது இந்த விஷயங்களை எல்லாம் பார்த்தார்கள். சந்திரன் அந்த நாளில் எந்த ராசியில் இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். அந்த ராசிக்குரிய திசையில் பிரயாணம் கூடாது.
மேஷமும், ரிஷபமும் மேற்கு,
மிதுனம் வாயு,
கடகம், சிம்மம் வடக்கு,
கன்னி ஈசானம்
துலாம், விருச்சிகம் கிழக்கு, தனுசு, அக்னி,
மகரம், கும்பம், தெற்கு,
மீனம் நிருதி,
இவ்விதம் கண்டறிந்து சந்திரன் எந்த ராசியிலிருக்கிறாரோ அந்த ராசி திக்கில் யாத்திரை செய்யக்கூடாது. இதுதான் சந்திர கண்டம்.
?சங்கு பற்றிச் சொல்லுங்களேன்?
– அனந்தநாராயணன், சிதம்பரம்.
சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் சக்தி வாய்ந்தது. பெரு மாளுக்குரியது பூஜையில் வைப்பது சிறப்பு. பல்வேறு சங்குகளைப் பற்றி விகனச ஆகமம் கூறியுள்ளது. எல்லா மூர்த்திகளுக்கும் ஒரே விதமான சங்கு இல்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு. 1) ஸ்ரீகிருஷ்ணர் கையிலிருப்பது – பாஞ்சசன்யம் எனும் சங்கு, 2) திருப்பதி திருவேங்கடவன் கையிலிருப்பது – மணிச்சங்கு, 3) ரங்கநாதர் கையிலிருப்பது – துவரிச்சங்கு, 4) அனந்த பத்ம நாப ஸ்வாமி கையிலிருப்பது – பருதச் சங்கு, 5) பார்த்தசாரதி கையில் இருப்பது – வையவச் சங்கு, 6) சுதர்ஸன ஆழ்வார் கையிலிருப்பது – பார்ச்சங்கு, 7) சௌரிராஜப் பெருமாள் கையிலிருப்பது – துயிலாச் சங்கு, 8) கலிய பெருமாள் கையிலிருப்பது வெண் சங்கு, 9) ஸ்ரீநாராயண மூர்த்தி கையிலிருப்பது – பூமா சங்கு என்பனவாகும். மகாபாரதத்திலும் சங்கு குறித்து வருகிறது.
பஞ்ச பாண்டவர்கள் ஐவருமே ஆளுக்கொரு சங்குவைத்திருந்தார்கள் என்பது மகாபாரதம் இயம்பும் 1) தர்மருடைய சங்கு – அனந்த விஜயம், 2) பீமனுடைய சங்கு – மகாசங்கம் (பௌண் டரம்), 3) அர்ச்சுனனுடைய சங்கு – தேவதத்தம்,5) நகுலனுடைய சங்கு சகோஷம், 5) சகாதேவனுடைய சங்கு – மணிபுஷ்பகம். சைவத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் விசேஷமானது.108, 1008 என சங்குகளில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்வார்கள்.