திமுக இளைஞரணி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்: பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு, அஞ்சலி செலுத்தி, இந்தக் கூட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. அதனை பெற்றுதந்த முதல்வருக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. பாஜ அரசின் அடக்குமுறைக்கு எதிராக, சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் ஒன்றிய அரசின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் முதல்வரை பாராட்டுகிறது. தமிழர்களுக்கு என்று தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒரு நாகரிகமும், வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜ அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம், இந்தித் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளையும், முழு ஒத்துழைப்பை நல்கிய மாவட்ட-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் செயலாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.