Thursday, September 19, 2024
Home » திமுகவின் பவள விழா ஆண்டு சென்னையில் செப்.17ல் முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்; தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்

திமுகவின் பவள விழா ஆண்டு சென்னையில் செப்.17ல் முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்; தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்

by Karthik Yash

சென்னை: திமுகவின் பவள விழா ஆண்டில் சென்னையில் செப்டம்பர் 17ல் முப்பெரும் விழா கொண்டாடுவது என்றும், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை த.வேலு, சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர் உள்பட 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* கலைஞர் அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய திமுக எனும் பேரியக்கத்தை அவருக்கு பிறகு தன் தோளிலும் நெஞ்சிலும் சுமந்து திமுக தலைவராக இயக்கத்தை கட்டுக்கோப்புடனும், தமிழ்நாட்டின் முதல்வராக மக்கள் நலத்திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாகவும் திறம்பட செயலாற்றி, ‘நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்து, அதற்கேற்ப தேர்தல் களத்திற்கான வியூகத்தை அமைத்து, ஓய்வறியாமல் உழைத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியின் நிலவரத்தையும் துல்லியமாக கண்காணித்து, 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெற்று தந்ததுடன், ‘நாடும் நமதே’ என்ற முழக்கத்தால், பாசிச மதவாத அரசியலுக்கு எதிராக இந்தியா கூட்டணியை கட்டமைப்பதில் முனைப்புடன் செயலாற்றி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் வலிமைமிக்க எதிர்க்கட்சி வரிசை உருவாகவும் – இந்திய ஒன்றியத்தை ஆள்பவர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு கடிவாளம் போட காரணமாக திகழ்ந்தவரும், திமுகவுக்கு தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்ற தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல் களங்களிலும் வாகை சூடி, தொடர் வெற்றி நாயகராகத் திகழும் திமுக தலைவர், முதல்வருக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உளம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

திமுக தலைவரின் கட்டளைக்கு ஏற்ப அயராது தேர்தல் பணியாற்றி நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியை குவித்திட பாடுபட்ட, அனைத்து அமைப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், கழகமே உயிர்மூச்சென உழைக்கும் உடன்பிறப்புகள், திராவிட இயக்கக் கொள்கையாளர்கள், தன்னார்வலர்கள், தோழமை இயக்கத்தினர், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாக்களித்த பொதுமக்கள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறது.
* பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் அண்ணாவால் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்கு பணியாற்றி, இந்த 2024ம் ஆண்டு பவள விழா நிறைவை கொண்டாடுகிறது. கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒவ்வொரு உடன்பிறப்பும் உள்ளன்புடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், அண்ணா வழியில் கலைஞர் கட்டிக்காத்த இயக்கமாம் திமுகவின் பவளவிழா ஆண்டு நிறைவை, திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று கொண்டாடி மகிழ இருப்பதால், இந்த முக்கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் திமுக படைத்த சாதனைகள்- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மகத்தான திட்டங்கள்- திராவிட மாடல் அரசைத் திறம்பட நடத்திவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மக்கள்நல திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிச் சுவர் விளம்பரங்கள் எழுதப்படுவதுடன், தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக் கூறும் நிகழ்வுகளுடன், திமுக கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்த பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திட செய்திடவும், ஒவ்வொரு ஊரிலும்உள்ள நம் கொள்கை தலைவர்களான பெரியார் – அண்ணா – கலைஞர் சிலைகளைப் பொலிவுபடுத்தி, மாலையிட்டு மரியாதை செலுத்துவது, கலைஞர் உருவாக்கி தந்த லட்சிய விழாவான முப்பெரும் விழா, இந்த பவள விழா ஆண்டில் திமுக தொடங்கப்பட்ட சென்னையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எழுச்சி மிகுந்த விழாவாக கொண்டாடப்படும்.

* தனது நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தினால், இந்திய ஜனநாயகத்தைக் காக்கின்ற தூணாக திகழ்ந்த நூற்றாண்டு நாயகராம் கலைஞரின் புகழை போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் மதிப்பிலான கலைஞரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், மாநில உரிமைக்கான குரலை தொடர்ந்து முழங்கிடும் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்ற நிலையிலும், தமிழ்நாட்டுக்கு என்று எந்த சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்து கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜ அரசுக்கு இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* தவறு செய்தால் கவுன்சிலர்கள் பதவி பறிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சில மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும் புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். சார்பு அணிகளை மாவட்ட செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். அமைச்சர்களும் திமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் திமுகவையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன்’’ என்றார்.

You may also like

Leave a Comment

18 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi