சென்னை: கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அறநிலையத்துறை சார்பில் கடந்தாண்டு பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் இப்போது பாஜ சார்பில் ஓடி ஓடி மதுரையில் மாநாடு நடத்துகிறார்கள். எங்களுடைய பணி என்பது மதம் சார்ந்த மக்களை பிரிப்பதல்ல, எந்த மதத்தினராக இருந்தாலும் அவரவர்கள் விரும்புகின்ற அமைதியான வழியில் அவரவர் விரும்புகின்ற தெய்வங்களை வழிபடவும், தொழுவதற்கும் தடையாக இருக்க மாட்டோம். மதத்தால், மொழியால், இனத்தால் பிளவுபடுத்துபவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே இவர்கள் 2026ம் ஆண்டு தேர்தலில் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் விரட்டியடிக்கப்படுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி யாரோ எழுதிக் கொடுப்பதை, யாரோ சொல்லுவதை, காற்று வாக்கில் வருவதை வைத்து அறிக்கை விடுகிறார். இந்த அரசு பொறுப்பேற்றபின் இதுவரை திருப்பணிகள் நடந்த 3,109 கோயில்களில் 117 கோயில்கள் முருகன் கோயில்களாகும். இந்த ஆட்சியில் மட்டும்தான் இத்தகைய பெருமை சேர்த்துள்ளோம். ஆகவே, 2026ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக வெற்றியை குவிக்கும். நயினார் நாகேந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. நீ வா… நீ வா… என்று கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேல் ஏறி படுத்துக் கொள்ளுங்கள் என்ற பழமொழி அவருக்கு பொருந்தும். திமுக கூட்டணியில் இருக்கின்ற அனைத்து தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கிறது. இந்த வலிமையாக கூட்டணியை பார்த்துதான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் கூட்டணியை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.