Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் 70 சதவீத பணிகள் நிறைவு எடப்பாடி பழனிசாமி செய்து முடித்ததுபோல பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன் கடும் தாக்கு

சென்னை: திமுக ஆட்சியில் 70 சதவீத பணிகள் முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை, இபிஎஸ் தான் செய்து முடித்தது போன்று பாராட்டு விழா நடத்துவது விந்தையாக உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம். 79 ஏரிகளுக்கு நீர் வழங்குவது திட்டத்தின் நோக்கமாகும். 6.5.2020ல் பணிகள் தொடங்கப்பட்டது. திட்டம் துவங்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட தொகை ரூ.565 கோடி. திமுக பதவியேற்ற மே 2021க்கு முன் இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் இத்திட்டத்திற்கு ரூ.404.4 கோடி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டது.

இந்த ரூ.404.4 கோடியில், 33 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரும்பு குழாய்கள், மின் மோட்டார்கள், வால்வுகள், இதர உபகரணங்கள் வாங்க செலவிடப்பட்ட தொகை ரூ.312 கோடி. இத்திட்டத்திற்கு 287 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. அதில் 48 ஏக்கர் மட்டுமே அந்த ஓராண்டில் கையகப்படுத்தப்பட்டு இ.பி.எஸ் ஆட்சியில் எம்.காளிப்பட்டி ஏரிக்கு மட்டுமே தண்ணீர் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீடு ரூ.673.88 கோடி. இத்திட்டத்தில் மேலும் 3 ஏரிகளுக்கு (செக்கான் ஏரி, கொத்திக்குட்டை, பி.என். பட்டி ஏரிகளுக்கு) நீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, செலவிடப்பட்ட தொகை ரூ.252.96 கோடியில் 3 நீரேற்று நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 27 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, 33 கிலோ மீட்டருக்கு இரும்பு குழாய் பைப்கள் பதிக்கப்பட்டு இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நிலம் கையகப்படுத்துதலில், 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இத்துறைக்கு நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 56 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டு, 40 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. முதலில் 100 ஏரிகளுக்கு நீர் வழங்கும் நோக்கில் பரிசீலிக்கப்பட்டாலும், அரசாணை வழங்கும் போது 79 ஏரிகளுக்கு மட்டுமே அரசாணை வழங்கப்பட்டது.

21 ஏரி பட்டா குட்டை என்பதால் அவை எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், எதையுமே தவறாகச் சித்தரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இந்த திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஒவ்வொரு முறையும் 100 ஏரி என்றே தவறாகக் குறிப்பிடுகிறார். அதிமுக ஆட்சியில் ஒரு வருட காலத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ஏறக்குறைய 70 சதவிகிதம் செலவினம் செய்து 1 ஏரிக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. இதர பணிகளை கருத்தில் கொண்டாலும், சுமார் 30 சதவிகித பணிகள் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. மாறாக, திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மீதம் இருந்த 30 சதவிகித செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 70 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டு, செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, எம்.காளிப்பட்டி ஏரிக்கு மட்டும் தண்ணீர் கொடுத்த இ.பிஎஸ். இத்திட்டத்தையே முழுமையாகச் செய்து முடித்தது போன்று சித்தரித்து எம்.காளிப்பட்டி விவசாய சங்கங்கள் பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.