சென்னை: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ அரசைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் 2 இடங்களில் நடக்கிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் மட்டும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், சென்னை வடக்கு மாவட்டம், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் நாளை(இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் இணைந்து பங்கேற்கிறார்கள். எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், இ.பரந்தாமன், எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள், கலந்து கொள்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை தெற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென் மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், தி.நகர் ஜெ.கருணாநிதி, காரம்பாக்கம் கணபதி, எழிலன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.இதே போல தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட நிர்வாகிகள்-எம்பி, எம்எல்ஏக்கள் தலைமையில், முன்னணியினர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.