சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
2027ல் மக்கள்தொகை அடிப்படையில்மக்களவைத் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள துடிக்கிறார்கள். 84வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி 2026க்கு பின் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத பாஜ ஆளும் மாநிலங்களின் எம்பிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது ஒன்றிய பாஜ அரசு.
இச்சதியை ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தி, பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஓரணியில் திரட்டி நியாயமான தொகுதி மறைவரையறை மேற்கொள்ள வலியுறுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போதெல்லாம் அதனை வீண் பயத்தை உண்டாக்குகிறார் என்று மூடி மறைக்க நினைத்தவர்கள் இப்போது 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவித்தது மூலம் சாயம் வெளுத்து போய் நிற்கிறார்கள்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை நடைபெற்றால் நாடாளுமன்றத்தில் 7.18% என்ற தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா, குறையாதா? இல்லை, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப் போவதில்லை என்றால் 2026ல் காலாவாதியாகும் சட்டத்திருத்தத்திற்கு மாற்றாக மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைக்கும் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்படும். பதில் சொல்லுங்கள் அமித்ஷா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.