திருச்சி: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டதும், பாஜ திமுகவோடு நெருங்கி விடக்கூடாது. நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது. திமுக மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் பொழுது அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். ஆனால் திமுக மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன் வைக்கிறார்.
கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல, இட்டு கட்டி எழுதப்பட்ட ஒன்று அல்ல, வரலாற்று தரவுகளுக்கு முரணானவை அல்ல, அதில் என்ன ஐயம் இருக்கிறது, அதில் முரணான தகவல் இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அவ்வாறு இன்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். அல்லது காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தற்காலிகமாக ஒரு தேக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் வரலாறு என்றைக்கும் வரலாறுதான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன தமிழர் தொன்மையும், தமிழர் நாகரிகமும் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. ஆகவே புதையுண்டது புதையுண்டதாகவே இருந்துவிடாது.
அது மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் என்பதற்கான சான்றுதான் கீழடி. ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. சாதியை ஒழிப்பதற்கு சாதிய முரணை ஒழிப்பதற்கு ஆளுநர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்? வெறுமனே திமுக மீது குற்றச்சாட்டு வைப்பதற்காக பேசுகிறாரா என்பது குறித்து விளக்கம் தேவை, அப்படி அதிக அளவிலான சாதிகள் முரண் இருக்குமானால் அதை ஒழிக்க ஒன்றிய அரசும், அதை சார்ந்திருக்கின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்ன செய்யப் போகிறது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.