திருச்சி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: லால்குடி தொகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அமைப்பு, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இருக்கும் என்று சொல்லமுடியாது என நான் பேசிய கருத்தை தவறாக சிலர் திரித்து கூட்டணி கட்சிகள் ஒற்றுமை பற்றி அமைச்சர் தவறாக பேசுகிறார் என்று செய்தியை வெளியிட்டுள்ளனர்.
என்றைக்கும் தற்போதைய கூட்டணியை, எங்கள் தலைவர் விட்டு கொடுக்க மாட்டார். இந்த ஆட்சி அடுத்த முறையும் தொடர வேண்டும். கலைஞருக்கு பின்பு தளபதி ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தநிலை வந்தாலும் பாடுபடுவோம் என்றுதான் பேசினேன். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமுகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. வேண்டும் என்றே நான் பேசியதை மாற்றி போட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.