ஈரோடு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி தொடர வேண்டும் என ஈரோட்டில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுக 31வது பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் சட்ட விதிகளில் 2 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, திராவிட இயக்கத்துக்கு எதிரான பகை சக்திகள் தமிழ்நாட்டை கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக 2017ம் ஆண்டு மதிமுக எடுத்த முடிவை எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் கடைப்பிடிக்கும். இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமை திறனோடு வழி நடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மதிமுக சார்பில் பாராட்டுகள் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென மதிமுக பொதுக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளை கூட்டணியில் பெற்று போட்டியிடுவது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிதி உதவியை ஒன்றிய அரசு முழுமையாக விடுவிக்க வேண்டும். வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜகவின் ஊதுகோலாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியா பின்பற்றி வந்த அணிசேரா கொள்கையை நரேந்திர மோடி அரசு குழி தோண்டி புதைத்து உள்ளது. இதற்கு மதிமுக கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.இஸ்ரேல், ரஷ்ய நாடுகள் நடத்தும் மனித குலத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும்.
முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும். கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு சிபில் ரிப்போர்ட் தேவை எனும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஜவுளி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.