சென்னை: திடீர் மாரடைப்பால் திமுக பெண் கவுன்சிலர் மரணம் அடைந்தார். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55). இவரது கணவர் கருணாநிதி. இவர்களுக்கு சூரியா என்ற மகனும், துர்கா தேவி என்ற மகளும் உள்ளனர். சரஸ்வதி துறைமுகம் பகுதி திமுக துணைச் செயலாளராக இருந்து வந்தார். மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 59வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். .நேற்று மாலை திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்… அங்கு சிகிச்சை அளித்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே, சென்னை மாநகராட்சியின் 146வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம், 122வது வார்டு கவுன்சிலர் ஷிபா வாசு, 165வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உயிரிழந்தனர்.
தற்போது 4வதாக கவுன்சிலர் சரஸ்வதி உயிரிழந்துள்ளார். இதனால், 146, 122, 165, 59 ஆகிய வார்டுகள் காலியாக உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘பெருநகர சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு உறுப்பினரும், திமுக துறைமுகம் மேற்குப் பகுதி துணைச் செயலாளருமான சரஸ்வதி கருணாநிதி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். சீரிய மக்கள் பணியால், தனது பகுதியில் உள்ள ஒவ்வொருவரது வீட்டிலும் அங்கமாகி சரஸ்வதி நற்பெயர் பெற்றிருந்தார். அந்த வகையில், ஒரு சிறந்த பெண் அரசியல் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக தோழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். சென்னை மேயர் பிரியாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.