சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், தி.மு.கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் சிறப்பித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மிக முக்கியம். 234 தொகுதிகளில் குறைந்தது 200 தொகுதிகள் ஜெயிக்க வேண்டும். முதல்வர் கொடுத்திருக்கும் இந்த பணியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும்.
திமுக மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி, 250 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, 375 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 500 பெண்கள் அடங்கிய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி தொகை, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என 1,335 நபர்களுக்குநலத்திட்ட உதவிகளை வழங்க அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தயார் ஆக வேண்டும். திமுகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து எப்போதும் சென்னை கிழக்கு மாவட்டம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.
எதிர்அணியில் இருக்கக்கூடிய அதிமுகவில், களஆய்வு நடத்துறோம்னு சொல்லி ஒவ்வொரு இடத்திலும் பெரிய கலவர ஆய்வுதான் நடத்துறாங்க. எல்லா நிகழ்ச்சியிலும் சண்டை. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “கூட்டணிக்கு வரச்சொன்னா ஒருத்தர் 100 கோடி கேட்கிறான். மற்றொருத்தன் 20 தொகுதி கேட்கறான்னு.. ஓபனா பேச ஆரம்பிச்சிட்டார்”. ஆனால் நம்ம திமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக தோழர்கள், கலைஞரின் உடன்பிறப்புகள் என அனைவரும் களத்தில் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.