திருச்சி: திருச்சியில் திமுக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
3ம் நாளான இன்று(25ம் தேதி) காலை திருச்சி கோர்ட் யார்டு ஓட்டலில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் திமுக அரசில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறை பற்றி ஆலோசனை வழங்கினார். மேலும் வரும் சட்டபேரவை தேர்தலை முன்னிடடு புதிதாக நியமிக்கப்பட்ட நகர இளைஞரணி அமைப்பாளர்கள் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும், வார்டு வாரியாக ஒவ்வொரு தெருக்களிலும் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், அவர்களின் கோரிக்கைகள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் போன்ற முழு ஆய்வை நடத்துவது பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டம் முடிந்ததும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்கிரந்து காரில் கரூர் வேலாயுதம்பாளையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு திமுக தொழிற்சங்க தலைவர் அண்ணாவேலு இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் மீண்டும் திருச்சி வந்த அவர் மதியம் 2 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.