சென்னை: திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் ஒன்றிய அரசுக்கு திமுக வர்த்தகர் அணி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. வணிகர்களை கசக்கி பிழியும் ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கதவு இலக்கம் தவறுதலாக அச்சானால் கூட, ஐம்பதாயிரம் அபராதம் என்பதை 500, 1000 என சிறிய அபராதமாக தந்திட வேண்டுகிறோம். தொழில் சம்பந்தப்பட்ட ஆணைகளை தமிழில் வெளியிட வேண்டும்.
சிறு வியாபாரிகளுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் தமிழிலும் ஆணைகள் வெளியிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொழில் நிறுவனத்திற்கு உரிமை வழங்குதல் என்கிற மாநகராட்சி நடவடிக்கையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என எளிமைப்படுத்திட வேண்டும். கலை இரவை கொண்டாட தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி, மதுரை, திருசசி, வேலூர் என ஐந்து நகரங்களில் அக்டோபர் முதல் பிப்ரவரிக்குள் நடத்துவது, முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.