சென்னை: தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களுக்கான 3 நாள் கருத்தியல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: திராவிட இயக்க சிந்தனை, கொள்கை, லட்சியம், கோட்பாடுகள் ஆகிய கருத்தியலில் வலிமை மிக்கவர்களாகவும், இளைய தலைமுறையான மாணவ சமுதாயத்தினரிடம் திராவிட இயக்க சிந்தனை, கொள்கை ஆகியவற்றை விதைக்கக் கூடியவர்களாக விளங்கிட வேண்டுமென்பதற்காகவும், அரசியலில் களமாடக்கூடிய முன்கள போர் வீரர்களாய் மாணவர் அணியினர் விளங்கிட வேண்டுமென்று, தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களுக்கு மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி முறையின் சாதனைகள் ஆகியவற்றினை குறித்து நன்கு தெரிந்து அரசியலில் களமாட, கருத்தியலில் வலிமைமிக்கவர்களாய் விளங்கிட மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் பயனளிக்கும் என்ற நோக்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீ.யோடு இணைந்து பணியாற்றும் ஆசிரியர் குழுவினைக் கொண்டு இக்கருத்தியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. பயிலரங்கத்தை தமிழ்நாட்டிலுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நான்கு இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் பயிலரங்கம் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு ஆகிய 18 மாவட்டங்களின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு இன்று (27ம் தேதி) முதல் 29ம் தேதி வரை மூன்று நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையிலுள்ள ‘ஏ.ஜி.எஸ். ஹாலிடே ரெசார்ட்’, பள்ளகனியூர் சாலை, அத்தனாவூரில், கருத்தியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.இன்று காலை 10 மணிக்கு பயிலரங்கத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்க உள்ளார். வருகிற 29ம் தேதி பிற்பகல் 3 மணியளவில், பயிலரங்க நிறைவு விழாவில் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வந்து, பயிற்சிப் பெற்ற மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களுக்கு நிறைவு பரிசு வழங்கி வாழ்த்துகிறார்.