Wednesday, April 17, 2024
Home » தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்கியது திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம்: ஒரே நாளில் 11 தொகுதிகளில் நடந்தது

தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்கியது திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம்: ஒரே நாளில் 11 தொகுதிகளில் நடந்தது

by Ranjith

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மட்டுமே கூட்டணிக் கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அதோடு தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுவை பெறுவதற்கான தேதியையும் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசி முடித்துள்ளார்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ‘‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்கட்டமாக 11 தொகுதிகளில் நேற்று ெபாதுக்கூட்டம் நடந்தது. அதில் சிவகங்கையில் ஐ.பெரியசாமி, நெல்லையில் கனிமொழி, விழுப்புரத்தில் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடியில் பொன்.முத்துராமலிங்கம், கடலூரில் எஸ்.எஸ்.சிவசங்கர், ஸ்ரீபெரும்புதூரில் மா.சுப்பிரமணியன், ஈரோட்டில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமக்கல்லில் தமிழச்சி தங்கபாண்டியன், கன்னியாகுமரியில் திண்டுக்கல் ஐ.லியோனி, மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன், சபாபதி மோகன், திருவண்ணாமலையில் கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், ஒன்றிய அரசின் பாராமுகம், நிதி குறைப்பு, திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, மீனவர்கள் மீது தாக்குதலை தடுக்க இயலாமை, தமிழகத்தை அவமதிக்கும் ஆளுநர், முக்கிய திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, குறிப்பாக மகளிருக்கு இலவச பயணம், பட்டதாரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பால் விலை குறைப்பு உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை விளக்கி பேசவும் உத்தரவிடப்பட்டது. முதல்முதலாக நேற்று நடந்த பொதுக் கூட்டத்தை தொடர்ந்து விரைவில் அடுத்த பொதுக்கூட்ட தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் திமுகதான் முதல் முறையாக தேர்தல் பொதுக்கூட்டத்தை தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi