சென்னை: திருவள்ளூரில் வரும் 5ம் தேதி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்” நடத்த முடிவெடுக்கப்பட்டு, டெல்டா மண்டல கூட்டம் ஜூலை 26 அன்று திருச்சியிலும்-தென்மண்டலக் கூட்டம் ஆகஸ்ட் 17 அன்று ராமநாதபுரத்திலும்-மேற்கு மண்டலக் கூட்டம் செப்டம்பர் 24 அன்று காங்கேயத்திலும், வடக்கு மண்டலக் கூட்டம் அக்டோபர் 22 அன்று திருவண்ணாமலையிலும் என இதுவரை 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு 20க்கும் மேற்பட்ட திமுகவின் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு கொள்கை வழிகாட்டுதலும்-தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டு, 4 மண்டலங்களிலும் வெற்றிகரமாக நடந்துள்ளது.
இதை தொடர்ந்து சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்வருகிற 5ம் தேதி திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, சென்னை கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, தென்மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு ஆகிய 11 திமுக மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டங்களுக்கு உட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை’ கூட்டி, பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.