கோவை: திமுகவிற்கு துணை நிற்கும் மதிமுக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று வைகோ கூறினார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: ஜூன் 22ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை முடிவு செய்ய உள்ளோம். உலகில் இருக்கும் மொழியியல் வல்லுநர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோர் உலகின் மூத்த மொழி தமிழ்மொழிதான் என சொல்லி இருக்கின்றனர். சமஸ்கிருதத்தில் இருந்து எல்லா மொழிகளும் வந்தது என அமித்ஷா ஆணவத்துடன் கூறுகிறார். ஆனால் அந்த மொழியை வெறும் 24 ஆயிரம் பேர்தான் பேசுகின்றனர். கமல்ஹாசன் இந்த கருத்தை பேசியதில் எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தை இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வதுதான் நல்லது.
உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என யார் சொன்னாலும், தமிழ்தான் பழமையான மொழி.தமிழகத்தில் ஒலித்த மொழி உணர்வு பிற மாநிலங்களில் கேட்பது நல்ல திருப்பம். மதுரை முருகன் மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் நடத்த, இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்வரிசையில் இருப்பதால், கற்பனையாக தோன்றியதை எல்லாம் பேசுகின்றார். அதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. பாமகவில் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்னை. அது குறித்து பேச விரும்பவில்லை. மதிமுக சார்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒலித்த குரல், பாராளுமன்ற சுவர்களிலும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உள்ளங்களிலும் பதிந்து இருக்கிறது. திமுக மாநிலங்களவை பொறுப்பை 6 ஆண்டுகளாக கொடுத்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இந்துத்துவா சக்திகளால் திராவிட இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை தகர்க்க, திமுகவை பலப்படுத்துவது தான் வழி என முடிவெடுத்து இருக்கிறோம். மதிமுக திமுகவிற்கு துணை நிற்கும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, எதிர்காலத்திலும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.