மயிலாடுதுறை: தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000மாவது குடமுழுக்காக பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு இன்று கோலாகலமாக நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களாக திகழும் தொன்மையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடமுழுக்குகள் நடைபெறாத கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை கடந்த 39 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கடையூர், அமிர்தகடேஸ்வரர் கோயிலின் உபகோயிலான மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த பரசலூரில் உள்ள பாலாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரர் கோயிலில் ரூ.80.10 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் நடைபெறும் 2,000வது குடமுழுக்காகும். இதையொட்டி கடந்த 25ம் தேதி கணபதி ஹோமமும், 27ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கியது. நேற்றுமுன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நேற்று நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரங்களை அடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி மகா குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் மகாபாரதி, எம்எல்ஏ நிவேதா முருகன், தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை, செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.