சென்னை: நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு கவர்னரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற கவர்னரையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் 20ம்தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.
நீட் தொடர் மரணங்கள் அனைத்திற்கும், ஒன்றிய பாஜ அரசும், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் அதிமுகவினரும் நீட் பாதுகாவலர் கவர்னர் ரவியுமே காரணம். கலைஞர் ஆட்சியின் போது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சியின் போது தமிழ்நாட்டுக்குள் வந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2வது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று முதல்வர், தமிழ்நாடு கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு கவர்னர் ரவி மே 5, 2022 அன்று அனுப்பி வைத்தார். எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும், இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் கவர்னரையும் கண்டித்து, இந்த உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘ஆளுநரை கேள்வி கேட்க முடியாதவர்கள்’
‘ஆக.20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாடு குறித்த கவனத்தை திசைதிருப்பவே திமுக உண்ணாவிரதம் நடத்துவதாக’ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கையில், ‘‘நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் அடம் பிடிக்கிறார். அதை கண்டித்துதான் உண்ணாவிரதம் இருக்க திமுக அணிகள் முடிவு செய்துள்ளன. ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்க முடியாதவர்கள்தான் அதிமுகவினர். அவர்கள் ஆளுநருக்கு ஆதரவாகதான் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நீட் விவகாரத்தில் ஏன் ஆளுநரை கேள்விக் கேட்கவில்லை, ஏன் அதிமுகவினர் தயங்குகிறார்கள்’’ என்றார்.