சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து எடப்பாடி சென்னையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 உறுப்பினர்கள் தேவை. சட்டமன்ற பலம் அடிப்படையில் திமுக நான்கு உறுப்பினர்களையும், அதிமுக இரண்டு உறுப்பினர்களையும் தேர்வு செய்யலாம்.
அதன்படி அதிமுகவின் இரண்டு இடங்களில் யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுதவிர, மொத்தமுள்ள 82 அதிமுக மாவட்ட செயலாளர்களில் 42 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநிலங்களவை தேர்தல் குறித்தும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் யாரை நிறுத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கட்சி வளர்ச்சி பணி குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன், 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 68,000 கிளை கழகங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும், மூத்த கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக சார்பில் 2 மாநிலங்களவை வேட்பாளர்களாக யாரை நியமிக்கலாம், கூட்டணி கட்சியான தேமுதிக கொடுத்து வரும் நெருக்கடி கொடுத்தும் எடப்பாடி விவாதித்தார். ஆனாலும், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அதிமுகவில் ஒரு மாநிலங்களவை சீட் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ குரலாகவே ஊடகங்களில் ஜெயக்குமார் பேசி வருகிறார். ஆகவே, அவருக்கு அளிக்கப்படலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதே சமயம் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செம்மலை மற்றும் ராயபுரம் மனோ ஆகியோரும் மாநிலங்களவை சீட் கேட்டு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்டு தேமுதிக நெருக்கடி கொடுத்து வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டையில் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறும்போது, ‘‘2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தபோது 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டது. அதன்படி தற்பொழுது எங்களுக்கு அதிமுக மாநிலங்களவை சீட்டு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
உறுதி அளித்தபடி மாநிலங்களவை எம்பி சீட் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று தேமுதிக பிறகு பார்த்துக்கொள்ளும்” என்றார். பிரேமலதா கருத்துக்கு அதிமுக தரப்பில் இருந்து இதுவரை எவ்வித சாதகமான பதிலும் சொல்லப்படவில்லை. தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படாது என்றே அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படியே தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படவில்லை என்றால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
தென் மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள ஜாதியினரும் சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறி வருகிறார்.