சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு பிரிவின் தலைவர் பெரம்பூர் நிசார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் ரத்ததான முகாம் மற்றும் தமிழ்நாடு ப்ரொபஷனல் காங்கிரஸ் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் ஏற்பாட்டில் செவிப்புலன் சிகிச்சை மருத்துவ முகாமை செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவி வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று கூறியுள்ளார். திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது. இந்த கூட்டணி எக்கு கோட்டை மாதிரி. இது இந்த தலைமுறைக்கான கூட்டணி மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கான கூட்டணி என்றார். நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், மாநில பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், அமைப்பு செயலாளர் ராம் மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.பாலமுருகன், தாம்பரம் நாராயணன், மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.