சென்னை: விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மை காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதற்கு திமுக தலைமையிலான “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்” இடம் பெற்றிருப்பது முதன்மை காரணமாக உள்ளது. இந்த கூட்டணியை சிதறடிக்க திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாக பயன்படுத்த முனைகின்றனர்.
குறிப்பாக, திமுகவைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பை கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள்தான். “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி” என்பது திமுக – விசிக உட்பட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஒரு ‘கூட்டமைப்பாகும்’. மேலும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்.
எப்படியாவது கூட்டணியை சிதறடித்து நமது வெற்றியை தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும். குறிப்பாக, திமுக – விசிக இடையே உரசலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பங்குண்டு. நாம் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறோம்.
எனவே, நமக்கு அதனைவிட்டு வெளியேறும் தேவை ஏதுமில்லை என்பதையும் அறிக்கை மற்றும் நேர்காணல்கள் மூலம் தெளிவுப்படுத்தினோம். எனினும், மீண்டும் அவர்கள் நம்மைக் குறிவைத்து அரசியல் சதிவலைகளைப் பின்னுகின்றனர். எனவே, தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்; உறுதியாக தொடர்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.