Tuesday, February 27, 2024
Home » ‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” முழக்கத்தோடு வரலாறு சொல்லும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்துகள்: கி.வீரமணி

‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” முழக்கத்தோடு வரலாறு சொல்லும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்துகள்: கி.வீரமணி

by Lavanya

சென்னை: இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” முழக்கத்தோடு வரலாறு சொல்லும் என கி.வீரமணி
தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, வருகின்ற 21-1-2024 அன்று சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாநாடு மிகச் சீரும் சிறப்புடனும் வரலாறு படைக்கும் வண்ணம் நடத்தப்படவிருக்கிறது. திராவிடர் கழகம் பிறந்த தாய் மண்ணாம் சேலத்தில் நடப்பது வரலாற்றுப் பொருத்தமும், சிறப்பும் ஆகும்.

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணியின் பீடுநடை!

தமிழ்நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளக் கொடுமைகளால் தள்ளி வைக்கப்பட்ட அம்மாநாடு, நாடே வியக்கத்தக்க வகையில் நடக்கவிருப்பதும், அதில் இளைஞர்களின் பாசறை முழக்கமும், கொள்கைப் பயணத்திற்கான பட்டறைப் பாய்ச்சலும் நாம் காணவிருக்கும் பெறற்கரிய பெரும் வாய்ப்பு! உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணிக்கு செயலாளராகப் பொறுப்பேற்றது தி.மு.க.வின் லட்சியப் பயணத்திற்கே ஒரு திருப்பத்தை உருவாக்கியது.

புத்தாக்கத்தோடு இயக்க இளைஞர்களைப் பகுத்தறிவுப் பாசறையின் பயிற்சி பெற்ற கொள்கைத் தங்கங்களாக்கிட அனைத்து முயற்சிகளையும் செய்து, பல்வேறு முனையங்களை ஏற்படுத்தி, கழக இளைஞர்களை கொள்கைக் கூடாரத்திற்கு, லட்சியப் போருக்குக் களம் காணும் அறிவுப் போர் வீரர்களாகப் பக்குவப்படுத்த அனைத்து முறைகளிலும், அதன் ஆற்றல்மிகு செயலாளர் ‘காற்று வேகத்தில்’ காரியமாற்றிவரும் கருத்துக் கனலாக, திராவிட இயக்கத்தின் கொள்கைப் புனலாக இயக்க இளைஞர்களை செதுக்கிச் செயலூக்கம் தந்து, செம்மாந்த நடையர்களாக்கிடும் அரிய சாதனையில் பெரிய வெற்றியைக் குறுகிய காலத்தில் அடைந்துள்ளார்.

தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதையில் அண்ணா, கலைஞர் வழியில்…

தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதையில் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில், இன்று ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்து, ‘இந்தியாவே’ பெருவியப்புடன் பார்க்கும் தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருந்துணையோடும், தூய்மையோடும் நடந்து, தி.மு.க.வில் இளைஞர்களின் எழுச்சி நம்பிக்கையாக புதிய பொன்னேட்டை திராவிடர் இயக்க வரலாற்றில் இணைத்து வருகிறார்; அது இவரது குறுகிய கால ஈடு இணையற்ற தொண்டறம்.

எனவே, உதயநிதி தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, ‘‘கொள்கை வேட்டி; பதவி துண்டு” என்று நம் அண்ணா கூறியதை அப்படியே இந்த இளம்வீரர் இனமான உணர்வுடன் வற்றாது வளையாது ஓடும் கொள்கை நதியாகவே காட்சியளித்து, ஆரியத்தையும், அதற்கு ஆலவட்டம் சுற்றுவோரையும் அடிவயிற்றில் நாளும் புளியைக் கரைத்துக் கொண்டே உள்ளார்!

தாய்க்கழகத்தின் பூரிப்புக்கும், புளகாங்கிதத்திற்கும் எல்லையே இல்லை!
எத்தனை எத்தனை செயற்பாடுகள்!

வெற்றுப் புகழ்ச்சியல்ல இது; (அது நமக்கு என்றும் இல்லாத பழக்கம் என்பதை அகிலம் அறியும்!)
அவர் தி.மு.க. இளைஞரணி செயலாளராகப் பொறுப் பேற்ற இந்தக் குறுகிய காலத்திற்குள், சாதித்தவை மிகவும் வியந்து பாராட்டத்தக்கவை.

1. தமிழ்நாடு முழுவதும் பயிற்சிப் பட்டறைகள்
2. கழக மூத்த முன்னோடிகளை, முதுபெரும் பெரிய வர்களை நேரில் சந்தித்து, பொற்கிழி அளித்துப் போற்றல்.
3. சமூக வலைதளத்தில் செயல்பாடு, தன்னார்வலர்களுக்கு நேரடிப் பயிற்சி – விருது!
4. முரசொலி பாசறை பக்கம் என்ற கொள்கை ஊசிகள்!
5. அவதூறுகளை முறியடிக்கும் சி.ஏ.ஏ., ‘நீட்’, பொய்ப் பெட்டி நிகழ்ச்சி.
6. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரம்.
7. பெரியார், ஸநாதனம், பகுத்தறிவுக் கருத்துகளில் சமரசமற்ற உறுதி!
8. மாணவரணி மற்றும் பிற அணிகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பு.
9. தொகுதிதோறும் கலைஞர் நூலகங்கள் (இதுவரை சுமார் 30).
10. தந்தை பெரியார் வழியில், ‘‘முத்தமிழறிஞர் பதிப்பகம்” என்று நூல் வெளியீட்டகம்மூலம் ‘நூலின்’ வாலாட்டத்தை ஒடுக்கும் அறிவுத் திருப்பணி.

எத்தனை எத்தனையோ!

இதற்குப் பிறகே இந்த எழுச்சிமிகு இளைஞரணி மாநில மாநாடு! ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வாளும் – கேடயமுமாக தி.மு.க. இளைஞரணி!

மாநில உரிமைகள்பற்றி இந்திய நாட்டிற்கே இந்த இளைஞர் மாநாடு கலங்கரை வெளிச்சமாகி வழிகாட்டி, வரலாற்றுப் பதிவினைச் செய்யும் என்பது உறுதி! இப்போது புரிகிறதா? தாய்க்கழகம் ஏன் இந்த இளைஞர் படைத் தளபதியை உச்சிமோந்து, மெச்சி ஊக்கப்படுத்துகிறது என்று. அரசியல், தேர்தல் இவற்றைத் தாண்டி, அடுத்த தலைமுறை காக்கும் மான மீட்பு உரிமைப் பணியில், மகத்தான அத்தியாயமாக இம்மாநாடு வெற்றி அடையும் என்று தளரா நம்பிக்கையுடனும் வாழ்த்துகிறோம்! ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாளும், கேடயமுமாகவும், சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் முரசொலியாகவும் அமையட்டும்!

திராவிடம் வெல்லும் நாளை வரலாறு சொல்லும்!

தி.மு.க. ஆட்சியின் காவல் படையாக எதிரிகளை எந்த நிலையிலும் எதிர்கொள்ளும் இளைஞர்களின் இப்படை அதன் செயலாளர் தலைமையில் தோள்தட்டி, தொடை தட்டிப் புறப்பட்டுள்ளது!

இப்படைத் தோற்கின்எப்படை வெல்லும்?”

என்ற முழக்கத்தோடு, வெற்றி வாகை சூட களம் காணும் கழகச் சிங்கக் குட்டிகளுக்கு நமது உளமார்ந்த பெரியார் வாழ்த்துகள்!

திராவிடம் வெல்லும் அதைநாளைய வரலாறு சொல்லும்” என்பது உறுதி! உறுதி!! உறுதி!!! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

seventeen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi