ராமநாதபுரம்: வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்றியது திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்று வருகிறது. விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ராமநாதபுரத்தில் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது. தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம். தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆளவேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம்.
தமிழகத்தை மீண்டும் ஆள வேண்டுமென கலைஞர் கண்ட கனவை நிறைவேற்றிவிட்டோம். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது. 68,036 பேர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டர்களை பாராட்டுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி முகவர்கள்தான். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது. அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்துவதால் நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள்.
மக்களுக்கு நமது ஆட்சி மீது நம்பிக்கை உள்ளது. பயனுள்ள திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். பின் தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் திமுக ஆட்சியில் தான் வளர்ச்சி கண்டது. நீண்ட காலமாக ஓடாமல் இருந்த ராமநாதசுவாமி கோயில் தேரை ஓட வைத்தோம். மத்தியில் பல ஆட்சிமாற்றங்களுக்கு வித்திட்ட முக்கிய கட்சி திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்தியாவின் கட்டமைப்பையே பாரதிய ஜனதா சீரழித்துவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்ற பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது?. பாஜக ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது தொடர்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெண்டர் விடவே 9 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து ஜிஎஸ்டி வரிவசூல் ஈட்டும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கான திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று சொன்னாரே, செய்தாரா பிரதமர் மோடி? என்று கேள்வி எழுப்பினார்.
ரூ.15லட்சம் போடவில்லை; 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டுக்கு தந்த வாக்குறுதிகளை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014ல் ராமநாதபுரத்தில் பேசும்போது சொல்லிய வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை. ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலாத்தலமாக அறிவிப்பேன் என்று சொன்னார் அதை செய்தாரா பிரதமர்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார். தமிழ்நாட்டிற்கான உரிமைகளை கேட்டால் பிரிவினை பேசுவதாக சொல்கிறார்கள்.
ஆட்சிமாற்றத்திற்கு பிறகு சிலப்பதிகாரம் நூலைப் படிக்க நிர்மலா சீதாராமனுக்கு இன்னும் நேரம் கிடைக்கும். ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காக நிர்மலா சீதாராமனுக்கு ஏன் கண்ணீர் வரவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து செங்கல் மட்டுமே உள்ளது. 9 ஆண்டுகளாக முன்னேற்றமில்லை. 2024 தேர்தலுக்கான நாடகம்தான் தற்போதைய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமாநில மக்களின் ஆதரவையும் பாஜக அரசு இழக்கதொடங்கிவிட்டது. பாஜக விமர்சிப்பதிலிருந்தே திமுக சரியான பாதையில் பயணிப்பதை தெரிந்துகொள்ளலாம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்கும்படி திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவின் அடிமையாகவே அதிமுக இருந்து வருகிறது. பொய்களையும், அவதூறுகளையும் பரப்பியே திமுகவுக்கு எதிராக பாஜக அரசியல் செய்கிறது. திமுக எம்.பி.க்கள் அச்சமின்றி பேசுவதுதான் பாஜகவின் கோபத்துக்கு காரணம்.
திமுகவின் கொள்கை இந்திய ஒன்றியத்தை வழிநடத்தும் கொள்கையாக விளங்குகிறது. இந்தியாவை காப்பாற்றப்போகும் ஒரே கூட்டணி இந்தியா கூட்டணிதான். இந்தியா கூட்டணியை எதிர்ப்பதால் இந்தியாவை எதிர்க்கும் ‘ஆண்டி இந்தியர்களாக’ பாஜகவினர் உள்ளனர். திமுகவினர் ஒவ்வொருவரின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாவின் உறுதி அளித்துள்ளார்.