Sunday, June 22, 2025
Home செய்திகள்Banner News மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எந்த மிரட்டலுக்கும் திமுக அடிபணியாது: தமிழகத்தின் நலனுக்காகவே டெல்லி சென்றேன்: எதிர்க்கட்சிகளை போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை: விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி

மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எந்த மிரட்டலுக்கும் திமுக அடிபணியாது: தமிழகத்தின் நலனுக்காகவே டெல்லி சென்றேன்: எதிர்க்கட்சிகளை போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை: விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி

by Arun Kumar

சென்னை: அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை தி.மு.க துணிவுடன் எதிர் கொள்ளும். எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, வழக்கம்போல வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

“இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்த முறை கலந்து கொள்வது ஏன்?” என்றும், “டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் பிரதமர் மோடியைச் சந்திக்க முதலமைச்சர் செல்கிறார்” என்றும், “வெள்ளைக் கொடி ஏந்திச் செல்கிறார்” என்றும் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர் அரசியல் எதிரிகள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இன்றல்ல நேற்றல்ல, அரை நூற்றாண்டுக்கு முன்பே பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். “ஆதரவளிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் தி.மு.க.” என்பது இந்தியாவின் பிரதமராக இருந்த இரும்புப் பெண்மணியின் சொற்கள். பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மன்மோகன் சிங் போன்ற பண்பட்ட அரசியல் தலைவர்களும் தி.மு.க.வின் நிலைப்பாட்டை நன்கு அறிந்தவர்கள்.

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசிப்பதற்கான நிதி ஆயோக் கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகக் கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிலைப்பெற்றிருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக – மாநிலத்தின் முதலமைச்சராக நானும் அதில் பங்கேற்கத் தீர்மானித்தேன். அதற்கான அறிவிப்பும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு, ஊடகங்களில் வெளியானது.

குடும்பச் சொந்தங்கங்கள் மீதும் வியாபாரக் கூட்டாளிகள் மீதும் தமிழ்நாட்டிலும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்று, அங்கு மீடியாக்கள் சூழ்ந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று பம்மாத்து செய்து, நான்கு கார்கள் மாறி மாறி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்து, தன்னையும் தன்னை நம்பியுள்ள தொண்டர்களின் அடையாளமான கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்துக் கூட்டணி அமைத்தவர், என்னுடைய டெல்லிப் பயணம் குறித்து ஏதேதோ அளந்துவிட்டதை ரசித்தபடியே டெல்லிக்குப் புறப்பட்டேன்.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்களும் பங்கேற்ற நிலையில், அனைவரையும் அவர் வரவேற்றிட, முதலமைச்சர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினர். மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி இல்லை என்பதைத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டம் அதற்கேற்ற வகையில் இருந்ததையும் உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.2045ம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்பதைப் பிரதமரிடம் தெரிவித்தேன்.

அதாவது, தற்போது இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10 சதவீதம் அளவிற்கு உள்ளது. அது 15சதவீத அளவிற்கு அமையும் என்பதையும், அதற்கேற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதையும் இந்தியத் தலைநகரில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தெரிவிக்க முடிந்தது.தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். குறிப்பாக, திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைந்த அளவிலான மாநில வளர்ச்சியை முன்னெடுப்பது வழக்கமாக உள்ளது.

அதுபோலவே, இந்தியாவின் பாதுகாப்பு என்று வரும்போது எவ்வித சமரசமுமின்றி, நாட்டின் ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் உண்மையான தேசப்பற்று கொண்ட இயக்கமாகத் தி.மு.க இருப்பதைப் அண்ணா காலத்திலிருந்தே நாடு கண்டு வருகிறது. கலைஞர் அதே வழியைத்தான் மேற்கொண்டார். அண்ணா, கலைஞர் வழியில்தான், இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரில் ஊடுருவி, அப்பாவிச் சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி கொன்ற தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்குச் சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்ததுடன், தீவிரவாத ஒழிப்பிற்காக இந்திய ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் முதலமைச்சரான உங்களில் ஒருவனான என் தலைமையில் பேரணியும் நடைபெற்றது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களே இத்தகைய பேரணியை நடத்தவில்லை என்றும், திமுக அரசு ஏன் நடத்துகிறது என்று உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட விமர்சனங்களைப் புறந்தள்ளி, கூட்டணிக் கட்சியினர் பங்கேற்புடனும், முன்னாள் படைவீரர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்புடனும் அந்தப் பேரணி வெற்றிகரமாக நடந்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. இந்தியாவில் தீவிரவாதத்திற்கு இடமில்லை என்பதை வெளிநாடுகளில் வலியுறுத்தும் குழுக்களில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்று, தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி.

அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டின் நிலையைத் தெரிவித்ததுடன், பிரதமரிடம் தமிழ்நாட்டிற்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ளவற்றையும் நேரடியாகவே வலியுறுத்தினேன். நாட்டின் நலனை எப்படி திமுக விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது.

நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவை தி.மு.கவினரைக் குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை.

அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும்? அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டமீறலானவை என்பதை உச்சநீதிமன்றக் கருத்துகள் மூலம் உறுதி செய்திருக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு.எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள். திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்ற உறுதியை மக்கள் எடுத்துள்ளனர். அவர்களுக்கான பணியை மேற்கொள்வதே நம் கடமை.

தேர்தல் களமும் மக்கள் பணியும் இணைந்துள்ள நிலையில், உடன்பிறப்புகளான உங்களை ஜூன் 1 அன்று மதுரையில் நடைபெறும் கழகப் பொதுக்குழுவில் சந்திக்க ஆவலாக உள்ளேன். உங்களால் நான் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைநகர் சென்னைக்கு வெளியே நடைபெறுகின்ற முதல் பொதுக்குழு. தமிழ் வளர்த்த நகரமாம் மதுரையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் மூர்த்தி அனுமதி பெற்று, அதற்கான ஏற்பாடுகளை அவருக்கே உரிய முறையில் சிறப்பாக மேற்கொண்டு வருவதை நாள்தோறும் கேட்டறிந்து வருகிறேன்.

திராவிடத்தின் அடுத்த தலைமுறை பாய்ச்சலுக்கும், தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஆர்த்தெழும் இயக்கமான தி.மு.க எவருக்கும் எப்போதும் அடிபணிவதில்லை என்பதை உணர்த்தி, எதிரிகளின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கும் நம் கழகத்தின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்தவும் கூடல் நகரில் பொதுக்குழு கூடுகிறது. உடன்பிறப்புகளை எதிர்நோக்கி மதுரை பொதுக்குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன். நீங்களும்தானே? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

* நாட்டின் நலனையும், மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: டெல்லிக்கு சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன். ரெய்டுகளுக்கு பயந்து சொந்த கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி பல கார்கள் மாறி கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை. டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியை கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை ரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது.

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலின் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன். நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினேன். தமிழ்நாட்டின் நலன் காத்திடவும், மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் களம்2026-க்கு ஆயத்தமாக ஜூன் 1ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் உங்களை சந்திக்க நான் ரெடியாகிவிட்டேன்… நீங்கள்? இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi