திருவண்ணாமலை, நவ.11: தமிழ்நாடு சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் என நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி மற்றும் பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் நீட் எதிர்ப்பிற்கான கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்பி சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பிரவீன்தரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கண்ணதாசன், ராஜசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி ரவி வரவேற்றார்.