வேலூர்: வருமான வரித்துறையின் சோதனையை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாயம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்க தொகையை வழங்கி பாராட்டினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்; அரசின் சார்பில் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதால் ஏழை, எளிய பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியான பெண்களுக்கு அடுத்த வாரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடுகளில் சோதனை செய்து வருகிறது. வருமான வரித்துறையின் சோதனையை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது என்று கூறியுள்ளார்.