சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது. இது, கடந்த 39 மாதங்களில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் நடத்தப்படும் 2000வது குடமுழுக்கு என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோயில்களை புனரமைத்து பணி மேற்கொள்ள 2022-23ம் நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தலா ₹100 கோடி வீதம் ₹300 கோடியை அரசு மானியமாக வழங்கி உள்ளார். அதன்படி 2022-23ம் நிதியாண்டில் ₹158 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோயில்களும், 2023-24ம் நிதியாண்டில் ₹150 கோடி மதிப்பீட்டில் 84 கோயில்களும் அரசு மானியம், கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கிற கோயில்களுக்கு பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ₹1 லட்சம் என்பது ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 3,750 கிராமப்புற கோயில்களுக்கும் 3,750 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கிற கோயில்களுக்கு ₹150 கோடி பணி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 9,415 கோயில்களில் ₹5,351.48 கோடி மதிப்பிலான 20,649 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 8,276 பணிகள் நிறைவு
பெற்றுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் மணிமகுடமாக 2,000வது குடமுழுக்கு நடைபெறும் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பரசலூர், வீரட்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சர்கள், ஆதீன பெருமக்கள், சமய சான்றோர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.