விருதுநகர்: விருதுநகர் எஸ்எஸ்கே கிராண்ட் மஹாலில், நேற்றிரவு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிர்வாகிகளுடன் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்எல்ஏக்கள், எம்பி, முன்னாள் எம்பிக்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் என 141 பேர் கலந்து கொண்டனர்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும். இதை நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்துவிடக் கூடாது. அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் பயன்பெற்றுள்ளது. இதை மக்களுக்கு உணர்த்தும்படி, நமது பிரசாரம் அமைய வேண்டும். இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும். 7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும்.