Thursday, July 10, 2025
Home செய்திகள்Banner News திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது! : எடப்பாடி பழனிசாமியை சாடிய அமைச்சர் சிவசங்கர்!!

திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது! : எடப்பாடி பழனிசாமியை சாடிய அமைச்சர் சிவசங்கர்!!

by Porselvi

சென்னை : திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைத்துச் சீரழிவு ஆட்சி நடத்திய பழனிசாமி, திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது! சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3-ஆவது நாளே முக்கியக் குற்றவாளிகள் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சக்கரவர்த்தி 11.06.2025-ம் தேதி இரவு பைக்கில் வீட்டிற்குச் சென்றவர் சாலையில் உயிரிழந்து கிடந்தார். சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவிட்டு, சந்தேகம் மரணமாக முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது போலீஸ். உடற்கூறு ஆய்வில், சக்கரவர்த்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்ததும், கொலை வழக்காக மாற்றப்பட்டு உடனே இருவரை போலீஸ் கைதும் செய்தது.

ஒருவரின் மரணத்திற்குத் தெளிவான காரணம் தெரியாவிட்டால் இபிகோ சட்டத்தின் (IPC) பிரிவு 174-ன் கீழ் முதலில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யும். பிறகு மரணத்தில் சந்தேகம் எழுந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 176-ன் கீழ் வழக்கை மாற்றுவார்கள். கொலை என்பது உறுதியானால், கொலை வழக்காக மாற்றலாம். இந்த அடிப்படையில்தான் சக்கரவர்த்தி வழக்கு முதலில் மர்ம மரணம் எனப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்காத, செய்தித்தாள் படிக்கிற பாமரனுக்குகூட தெரிந்த இந்த உண்மை, உள்துறையை கையில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தெரியவில்லை என்றால் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமரவே தகுதியில்லாதவர். காவல் துறைக்குப் பொறுப்பு அமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமிக்கு இந்த அடிப்படை அறிவு கொஞ்சம்கூட இல்லை.

பாஜக பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே பாமக பிரமுகர் சக்கரவர்த்தி கொலை நடந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, பாமகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பழனிசாமி, பாமகவுக்கு தூது விடுவது போல அறிக்கை விட்டிருக்கிறார். பாமக நிர்வாகியைக் கொலை செய்தவர் பாஜக நிர்வாகியின் மகன் என்று பழனிசாமி ஏன் சொல்லவில்லை?அரசியல் செய்ய எதுவும் கிடைக்காமல், ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா? எனக் குற்றங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே சொல்லும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தரவுகளின் படி 2020 ஆண்டு பழனிசாமியின் ஆட்சியில் IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 8,91,700, திமுக அரசின் தீவிரமான நடவடிக்கையால் 2022 ஆண்டு IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை1,93,913 குறைந்தது. கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் குற்றங்களைக் குறைத்தது திராவிட மாடல் அரசுதான். இந்த இலட்சணத்தில் கேடுகெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி அதிமுக ஆட்சியில் அமைதியும் வளமும் வளர்ச்சியும் பெற்றதாகக் கூசாமல் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

துப்பாக்கி கலாச்சாரம் பற்றியெல்லாம் பழனிசாமி பேசலாமா? அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்க மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல பழனிசாமி பேசுவதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.

* 2018-ல் கள்ளத் துப்பாக்கி கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் எனும் காவலரே கைதானார்,

* 2020-ல் 8 துப்பாக்கிகள், 60 தோட்டாக்களுடன் கும்பகோணம் அருகே மருத்துவர் ராம்குமார் பிடிபட்டார்.

* 2018 ஏப்ரலில் அடையாறு இந்திரா நகர் வங்கியில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.

* 2018-ல் கன்னியாகுமரியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு நாட்டுத் துப்பாக்கி விற்பனை.

* 2020 மே மாதம் திருப்பூரில் நிலம் தொடர்பான பிரச்சினையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர்,

* 2020 ஜூலையில் ஈரோட்டிலிருந்து 9 எம்.எம். ரகக் கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் திருநெல்வேலிக்கு வந்த குமுளி ராஜ்குமார்.

* 2020 செப்டம்பரில் சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணை மிரட்டிய நபர்,

* 2020 நவம்பரில் திருக்கோவிலூர் அருகே மளிகை கடைகாரர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.

இப்படிப் பழனிசாமி ஆட்சியில் நடந்த துப்பாக்கி சம்பவங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். “துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” என்று கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

2020 ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், “பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்” என்று கூறியது பழனிசாமிக்கு தெரியாதா? இதுதான் அவருடைய ஆட்சியில் நிலவிய அமைதி, வளம், வளர்ச்சியா?

சக்கரவர்த்தி கொலை வழக்கில், “கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்” என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரபாத்துக்கு டபுள் பேரல் துப்பாக்கியை யார் வாங்கி கொடுத்தது? என பழனிசாமி விளக்குவாரா?

திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் சிறப்பாகப் பாதுகாத்து வருவதால்தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi