சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,
சனாதனத்தை தடுப்பதில் திமுக-காங்கிரஸ் கை கோர்த்து நிற்கிறது
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சனாதனத்தை தடுப்பதில் திமுக-காங்கிரஸ் கை கோர்த்து நிற்கிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கூட்டணியாக “இந்தியா” கூட்டணி உள்ளது.
பிரச்சனை வந்தாலும் பேசித் தீர்ப்போம்
காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே சிலவற்றை பேசுகிறோம். கூட்டணியில் பிரச்சனை என்றாலும் முடிவு தேசிய தலைமைதான் எடுக்கும். திமுக – காங்கிரஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக உள்ளது. சென்னை மேயரிடம் பொதுவெளியில் கார்த்தி சிதம்பரம் வெள்ளை அறிக்கை கேட்டிருக்க வேண்டாம். கூட்டணிக்குள் இதுவரை பிரச்சனை இல்லை, வந்தாலும் பேசித் தீர்ப்போம். கூட்டணிக் கட்சிகள் கருத்து சொல்வதில் என்ன தவறு? என்றும் பேசினார்.
முருகனுக்கு மாநாடு – தவறு இல்லை
முருகனுக்கு தமிழ்நாடு அரசு மாநாடு நடத்தியதில் தவறு இல்லை. திமுக அமைச்சராக இருந்தாலும் சேகர் பாபு கடவுள் நம்பிக்கை உள்ளவர். சமூகநீதி பற்றி பேசும் பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்?. பெண்களுக்கு அநீதி நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை தேவை. மணிப்பூருக்கு பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் செல்லாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.