நெல்லை: கடந்த முறை பிடித்த இடங்களை விட கூடுதல் இடங்களை திமுக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் பிடிக்கும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நெல்லை மாவட்டத்தில் 14 புதிய வழித்தடங்களில் 14 மினிபஸ்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். துப்பாக்கி கலாச்சாரம் என எடப்பாடி பழனிச்சாமி பேசுவது நகைப்புக்குரியது. தூத்துக்குடியில் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது அனைவருக்கும் தெரியும். தேர்தல் நெருங்குவதால் தலைவர்கள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ள அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த முறை பிடித்த இடங்களை விட கூடுதல் இடங்களை திமுக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் பிடிக்கும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். தேர்தல் நெருங்குவதால் பாஜகவினர் புதுசு புதுசாக யோசித்து எதையாவது செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.