கரூர்: தேமுதிகவுடன் கூட்டணி பற்றி விஜய்தான் சொல்ல வேண்டும் என்று பிரேமலதா கூறினார். கரூர் தேமுதிக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் நேற்று கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தனித்து நிற்கும் பார்முலாவை உருவாக்கியதே கேப்டன்தான். இனிமேல் நாங்கள் தனியாக நிற்கிறோமோ இல்லையா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். 2026 தேர்தலில் வெற்றி பெற்று பெரிய பலத்தோடு சட்டமன்றத்துக்கு போக வேண்டும். அதுதான் எங்களின் இலக்கு. எங்களின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது. எங்களின் நகர்வுகள் தேர்தலை நோக்கித்தான் இருக்கும். அதிமுகவில் ராஜ்ய சபா சீட் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுதான், எழுதிக் கொடுத்த ஒன்றுதான். அதற்கு பிறகு 2025 அல்லது 2026 என எழுதி தாருங்கள் எனக் கேட்டோம். ஆனால், எடப்பாடி, வருடம் எழுதி தருவது மரபு கிடையாது, எழுதி தருவதை விட என்னுடைய வார்த்தைதான் மிக முக்கியமானது என்றார்.
இப்போது சொல்லியிருக்கிறார்கள், 2026ல் உறுதியாக தரப்படும் என. நாங்கள் அனைவரும் நினைத்தது 2025ல் கிடைக்கும் என. ஆனால், அவர், 2026ல் தரப்படும் என கூறியுள்ளார். பொறுத்தார் பூமி ஆள்வார். எனவே, பொறுமையாக இருப்போம். கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். மொத்த பவரும் ஒரே கரங்களில் இருப்பதை விட, கூட்டணி ஆட்சி என்பது நல்ல விஷயம். 2026ல் அதற்கான சாத்தியம் இருக்கு. எதையும் இப்பவே சொல்ல முடியாது, நேரம் இருக்கு அப்ப பார்த்துக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். விஜய் கட்சியுடன் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு. அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிறது என்றார்.