சென்னை: தேமுதிகவுக்கு தற்போது மாநிலங்களவை சீட் இல்லை என சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். இது தொடர்பாக பேட்டி அளித்த கே.பி.முனுசாமி கூறியதாவது; மாநிலங்களவைத் தேர்தலுக்கு அதிமுக வேட்பாளராக இன்பதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக மற்றோரு வேட்பாளராக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் அறிவிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக உள்ளார் தனபால். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும். 2026ல் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவுக்கு 2026ல் தான் மாநிலங்களவை சீட் என்று எடப்பாடி கூறியிருந்தார். தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுகவின் கடமை என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் தற்போது சீட் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசியிருந்த நிலையில் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.
தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் 2 இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. தேமுதிக யாருடன் கூட்டணி என்று ஜனவரி மாநாட்டில்தான் அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியிருந்தார். ஜனவரியில் கூட்டணி அறிவிப்போம் என பிரேமலதா கூறிய நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி தொடர்வதாக அதிமுக அறிவித்துள்ளது. தேமுதிகவை முதுகில் குத்திவிட்டது அதிமுக என மூத்த பத்திரிகையாளர் பிரியன் விமர்சனம் செய்துள்ளார்.