கிருஷ்ணகிரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூ.21 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து அசைவ உணவுகளை சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு உணவு அருந்தி மகிழ்வது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை அன்று இறைச்சி விற்பனையானது களைக்கட்டும் என்பதால், தீபாவளி பண்டிகையின் போது விற்பனைக்கு தேவையான ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளை முன்னதாக வியாபாரிகள் வாங்கி வளர்த்து வரும் நிலையில், பொதுமக்களும் வாங்கி வளர்த்து வருகின்றனர்.
அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூ.21 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வார சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மரிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த வார சந்தையானது தற்போது வரை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர். ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடுகள் அதிகபட்சமாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த ஆட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.