சென்னை: தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. தங்கம் விலை ஏறுவதும், குறைவதுமாக கண்ணாமூச்சி விளையாடி வருகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 7ம் தேதியும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.45,360க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,660க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.45,280க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்றும் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. நேற்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.5,615க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.44,920க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. மேலும் சில மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.45 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இந்த தொடர் விலை குறைவு தீபாவளி பண்டிகைக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நகை விலை குறைவால் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.