காஞ்சிபுரம்: தீபாவளி பண்டிகையொட்டி, காஞ்சிபுரம் மாநகரிலுள்ள தனியார் பட்டாசு கடைகளில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட காவல் போலீஸ் எஸ்பி சுதாகர் ஆய்வு மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனைகள் சூடுப்பிடித்துள்ளது. காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளிலுள்ள பல்வேறு தனியார் பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று தனியார் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பட்டாசு கடைகளில் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார்நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா, தீ தடுப்பு கருவிகள் சாதனங்கள் முறையாக வேலை செய்கின்றனவா என்பன போன்ற பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளின் தரம் குறித்தும், பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா என்பன குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
* வடகிழக்கு பருவமழை தொடர்பாக புகாரளிக்க அவசர தொடர்பு எண்கள்
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ளநிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சித்துறை மற்றும் பேரூராட்சிகள் சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் தெரிவிக்கவும் கீழ்காணும் தொலைபேசி எண்கள், அவசர கால உதவி எண்கள் மற்றும் சமூக வலைத்தளத்தை அணுகலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள், அரசு அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் (ஜஎம்டி) மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டினை மட்டும் பின் தொடருமாறும், தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
044-27237107, 044-27237207,
கைப்பேசி/வாட்ஸ்அப் எண்
9384056227
சமூக வலைத்தள பக்கங்கள்
Twitter :
@KanchiCollector
@DDMAKANCHIPURAM
Facebook:
@kanchicolltr
Instagram:
@kanchicolltr