சென்னை: சென்னையில் பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 38 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 நாட்களாக தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் 102 தீ விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தீ விபத்துகளில் 38 பேர் தீக்காயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 பேர் மட்டும் தற்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 16 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 9 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. 7 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக பாதிப்பு யாருக்கும் இல்லை என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த 2 பேர் உள் நோயாளிகளாகவும், 15 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒரே ஒருவர் தீக்காயத்தால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொறுத்தவரை 5 பேர் லேசான தீக்காயங்களுடன் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றிருப்பதாகவும், கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் தீக்காயம் காரணமாக யாரும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.