சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்தான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திரரெட்டி, சிறப்பு செயலாளர் வெங்கடேஷ், போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர நவம்பர் 13ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 3,167 சிறப்புப் பேருந்துகளும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,467 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் பின்வருமாறு இயக்கப்பட உள்ளன.
* மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், கே.கே. நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து (மெப்ஸ்) திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலைக்கு போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து (பூந்தமல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்) வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* கோயம்பேட்டில் இருந்து மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (ஓஎம்ஆர்) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்ட சாலை வழியாக செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 11 முன்பதிவு மையங்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நேரடியாக முன்பதிவு செய்ய வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 1 மையமும் என 11 மையங்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்படும். அதேபோல், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள போக்குவரத்து துறையால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* இணைப்பு பேருந்துகள்
கோயம்பேட்டில் இருந்து மாதவரம் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளது.
* 20 உதவி மையங்கள்
பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* இதுவரை 68 ஆயிரம் பேர் முன்பதிவு; அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி நவ.9, 10, 11 ஆகிய தேதிகளில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளன. கடந்தாண்டை போல, எந்தவித பிரச்னையும் இல்லாமல் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் எல்லா துறைகளுடன் இணைந்து போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 68 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்கனவே கொடுத்த அறிவுரைகளை மீறிய 125 வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, அவர்களுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளோம். கடந்தாண்டு எப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கினார்களோ அதேபோல் இயக்க வேண்டும் என அதன் உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பாக டெண்டர் விடப்பட்டு அதற்கான நிறுவனங்களிடம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நவம்பர் இறுதியில் பேருந்துகள் இயக்கத்திற்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
* புகார் அளிக்க கட்டணமில்லா எண்கள்
போக்குவரத்து கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். அதேபோல், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா எண்கள் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.