சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை திரும்பும் பொதுமக்களால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தென் மாவட்ட மக்கள் உள்பட சுமார் 15 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று மாலை முதல் மீண்டும் சென்னை நோக்கி வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தவிர கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீண்டும் சென்னை நோக்கி பயணிப்பதால் சென்னை செல்லும் சாலையில் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரத்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக காவல்துறை அறிவுறுத்தல்படி சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை தேங்கவிடாமல் அனுப்பி வைத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகின்றனர். இருந்தாலும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உரிய நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
விடுமுறை முடிந்து திங்கட்கிழமை எப்போதும் போல பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயங்க உள்ளன. இன்றைய தினம் மேலும் இரு மடங்கு வாகனங்கள் சென்னை நோக்கி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நாளைய தினம் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதை சீர் செய்ய கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்த இருப்பதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.