மதுரை: சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து பட்டாசு பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிக்கு கொண்டு செல்கிறோம். கடந்த 20ம் தேதி சிவகாசியில் உள்ள எங்களது கிளை அலுவலகத்திற்கு வந்த போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் முறையான அனுமதியின்றி பட்டாசு பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். நாங்கள் முறையான அனுமதி பெற்று சரக்கு மற்றும் பார்சல் சர்வீஸ் மேற்கொண்டு வருகிறோம். எனவே சீலை அகற்றவும், பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும என கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், வெடிக்கக் கூடிய பொருட்களை நீதிமன்ற பாதுகாப்பில் வைத்திருப்பது சரியாக இருக்காது. பட்டாசு பொருட்களை வைத்திருக்க முறையான அனுமதி பெறாத நிலையில் அந்த பொருட்களை பாதுகாப்பது சரியாக இருக்காது. எனவே மனுதாரர் அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற வேண்டும். அங்குள்ள பட்டாசுகளை மனுதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவர் பட்டாசுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம். அதே நேரம் போலீசார் பட்டாசுகளின் பட்டியலை தயார் செய்து வழக்கு நடைமுறைகளை தொடரலாம். மனுதாரர் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.