சேலம்: தீபாவளியையொட்டி முக்கிய வழித்தட ரயில்களில் முறைகேடாக டிக்கெட் எடுத்து விற்பனை செய்து வரும் ஐஆர்சிடிசி ஐடி.,க்கள் விவரத்தை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் சேகரித்துள்ளனர். அந்த இடங்களில் தீவிர சோதனையிட முடிவு செய்துள்ளனர். நாட்டின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ரயில் போக்குவரத்தை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிக்க பயணிகளிடையே கடும் போட்டி இருந்து வருகிறது. 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் முறையை பின்பற்றுவதால், ஏராளமான பயணிகள் முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த டிக்கெட் முன்பதிவிற்கு ரயில்வே ஸ்டேஷன்களில் முன்பதிவு மையங்களை ரயில்வே நிர்வாகம் வைத்துள்ளது. அங்கு நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுபோக இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாக ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது பெருமளவு அதிகரித்துள்ளது. அதாவது 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த ஐஆர்சிடிசி ஆப்களில் சிலர் முறைகேடாக டிக்கெட்டை புக்கிங் செய்து, அதிக விலைக்கு விற்கின்றனர். அப்படி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதாவது, ஐஆர்சிடிசி பர்சனல் ஐடி வைத்துள்ள வாடிக்கையாளர், ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 12 டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். தனது ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்திருந்தால் மாதத்திற்கு 24 டிக்கெட் எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பர்சனல் ஐடி வாடிக்கையாளர்கள், தங்களுக்கோ அல்லது ரத்த உறவுகளுக்கோ மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
அதுவே ஐஆர்சிடிசி வகுத்துக் கொடுத்துள்ள விதிமுறை. ஆனால் முறைகேட்டில் ஈடுபடும் ேமாசடி நபர்கள், பல பெயர்களில் ஐஆர்சிடிசி பர்சனல் ஐடிகளை ஏற்படுத்திக் கொண்டு, முறைகேடாக டிக்கெட் எடுத்து பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அப்படி விற்பனையில் ஈடுபடும் மோசடி பேர்வழிகளை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை ஐஆர்சிடிசி அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். சந்தேக ஐஆர்சிடிசி ஐடிக்கள் பட்டியலை தனியாக எடுத்து, அந்தந்த ரயில்வே கோட்ட ஆர்பிஎப் போலீசாரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் 500க்கும் மேற்பட்ட சந்தேக ஐடி.,க்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக ஐடிக்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதை அந்தந்த கோட்ட ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஐஆர்சிடிசி ஐடிக்களை வைத்துள்ளவர்களின் கடைகள் மற்றும் கணினி மையங்களில் சோதனையிட முடிவு செய்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஆத்தூர், மேட்டூர், ராசிபுரம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் சிலர் ஐஆர்சிடிசி ஆப்பை முறைகேடாக பயன்படுத்தி டிக்கெட் எடுத்து விற்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், அந்த இடங்களில் ரெய்டு நடத்த ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபற்றி ஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில், \\”ஐஆர்சிடிசி ஆப் மூலம் முறைகேடாக டிக்கெட் எடுத்து விற்கும் நபர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தவும், அந்த ஐடிகளை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சோதனை நடத்தப்படவுள்ளது. முறைகேட்டில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைக்கவுள்ளோம். அதனால், ஐஆர்சிடிசி பர்சனல் ஐடிக்களை விதிமுறைக்கு உட்பட்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றனர்.