சென்னை: தீபாவளியை முன்னிட்டு ரயில்வே காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 12ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர்கள் சுகுணா சிங், செந்தில்குமார் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடவாமல் தடுக்கும் பொருட்டு 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 26 காவல் ஆய்வாளர்கள், 97 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் உட்பட மொத்தம் 1,300 பேரை கொண்டு பின்வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* அனைத்து ரயில் நிலைய நுழைவாயில்களிலும் காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிக்கப்பட்டு வருகிறது.
* தண்டவாள ரோந்து அலுவலுக்கு காவல் ஆளினர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து அலுவல் நடந்து வருகிறது.
* பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு என்று பெண் காவல் ஆளினர்கள் சீருடையிலும் மற்றும் சாதாரண உடையிலும் நியமிக்கப்பட்டு பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
* ரயில்களில் வெடி மற்றும் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதை கண்காணித்து தடுக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் சந்தேக நபர்கள் பிடிக்கபடுவார்கள்.
* இருப்புப்பாதை குற்றங்களில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடமாநில கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
* மேலும் மோப்ப நாய்படை மூலமும் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயமுத்தூர், சேலம், மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்கள்ல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* ரயில் பயணிகள் 24×7 மணி நேரமும் காவல் உதவி மைய தொலைபேசி எண்.1512ஐ தொடர்பு கொண்டு பாதுகாப்பு சம்மந்தமாக புகார்களை தெரிவிக்கவும் மற்றும் 99625 00500 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்னை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.