திருப்பூர்: தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், திருப்பூரில் முக்கியமான கடை வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருட்டை தடுக்கும் வகையில் உயர்கோபுரம் அமைத்தும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள், பட்டாசுகள், ஆடைகள் தான் இவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் கடை வீதிகளுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகமான பொதுமக்கள் கடை வீதிகளுக்கு குவிவார்கள் என்பதால், மாநகர போலீசார் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய சாலையான குமரன் சாலையில் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதுபோல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி அருகே போன்ற பகுதிகளில் அதிகமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதுபோல் உயர்கோபுரம் அமைத்தும் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.