சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழ்நாடு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏற்கெனவே தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவீதம் போனசை 20 சதவீதமாக உயர்த்தி தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் 5,329 சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தமிழகம் முழுவதும் 24 ஆயிரம் பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். 2003-04ம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.3,639 கோடி என்று இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த வருவாய் தற்போது ரூ.44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் தங்களுக்கான தீபாவளி போனஸ் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் பணியாளர்களின் சங்கங்களுடன் கடந்த 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், 21 டாஸ்மாக் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது முதல்வருடன் பேசி போனஸ் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்தார். இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர் முத்துசாமி, உள்துறை செயலாளர் அமுதா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கையெழுத்தானது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர்.